Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 26)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ஸ்ரீமந் நாராயணனுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் – ஆழ்வார்களின் திருவாக்கில் உள்ளவை

மூலம் - இப்படி ஸர்வேச்வரனுக்கும் ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் உண்டான விசேஷங்களை “எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவரல்லாதார் தாமுளரே” என்றும், “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்றும், “மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் நாவிக்கமல முதற்கிழங்கு” என்றும், “தீர்த்தனுலகளந்த சேவடி மேல் பூந்தாமஞ்சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்றும், “வானவர் தம்மையாளுபவனும் நான்முகனும் சடை முடியண்ணலும் செம்மையானவன் பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே” என்றும், “பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே” என்றும், “ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே” என்றும், “எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்றும் பல முகங்களாலே அருளிச் செய்தார்கள்.

– இப்படியாக ப்ரம்மன், ருத்ரன் முதலானவர்களுக்கும் ஸர்வேச்வரனுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆழ்வார்கள் கீழே உள்ளபடி அருளிச் செய்தனர். பெரிய திருமொழி (11-6-2) - எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவரல்லாதார் தாமுளரே – அவன் ப்ரளய காலத்தில் தனது வயிற்றில் வைத்து, பின்னர் உமிழ்ந்தான். இப்படி அல்லாத தேவர்கள் யாரும் உள்ளனரோ? நான்முகன் திருவந்தாதி (1) - நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் திருவாய்மொழி (10-10-3) - மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம் நாவிக்கமல முதற்கிழங்கு – உன்னையே வணங்கி நிற்கும் ப்ரம்மன், சிவன், இந்த்ரன் ஆகியோர்கள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ள திருநாபிக்கமலத் தாமரைக்குக் கிழங்கு போன்றவனே திருவாய்மொழி (2-8-6) - தீர்த்தனுலகளந்த சேவடி மேல் பூந்தாமஞ்சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை – மூன்று உலகங்களையும் அளந்த எம்பெருமானின் திருவடிகளில் சேர்க்கப்பட்ட மாலைகள், சிவனின் தலையில் உள்ளதை அர்ஜுனன் கண்டான், இதன் மூலம் இவனே ஸர்வேச்வரன் என்று தெளிந்தான். திருவாய்மொழி (3-6-4) - வானவர் தம்மையாளுபவனும் நான்முகனும் சடை முடியண்ணலும் செம்மையானவன் பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே – தேவர்களை ஆளும் இந்த்ரன், நான்முகன், சிவன் ஆகிய அனைவரும் மிகச்சிறந்தவனான எம்பெருமானின் திருவடித்தாமரைகளை எண்ணி, புகழ்ந்தபடி இருப்பர். திருவாய்மொழி (4-10-4) - பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே பெரியாழ்வார் திருமொழி (4-10-4) - ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே பெரியாழ்வார் திருமொழி (5-3-6) - எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை – காளை மாட்டைத் தனது கொடியாகக் கொண்டவனும், ப்ரம்மனும், இந்த்ரனும் ஆகிய யாரும் ஸம்ஸாரம் என்னும் பிறவிப் பிணிக்கு மருந்து அறிந்தவர்கள் அல்லர்.