Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 25)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

மூலம் - இத்தேவதாந்தரங்களை பகவச்சரீரமென்று அறியாதே பற்றினார்க்குச் சார்வாகனாயிருப்பான் ஒரு ஸேவகன் ராஜாவினுடம்பிலே சந்தனாதிகளைப் ப்ரயோகிக்க ராஜசரீரத்தில் ஆத்மாப்ரீதனமாப்போலே வஸ்துவ்ருத்தியில் ஸர்வேச்வரனே ஆராத்யனானாலும். “யே அப்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயா அந்விதா: தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்” என்கிறபடியே சாஸ்த்ரார்த்த வைகல்ய முண்டானபடியாலே அவற்றிற் சொன்ன பலம் விகலமாம். பகவச்சரீரங்களென்றறிந்து க்ஷுத்ர பலங்களைக் கடுகப் பெற வேணுமென்கிற ராகவிசேஷத்தாலே அவர்களை உபாஸிப்பார்க்கு அவ்வோ பலங்கள் பூர்ணங்களாம். இப்படி அறிந்தால் பகவான் தன்னையே “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ” என்கிறபடியே பலாந்தரங்களுக்காகவும் பற்றினால் அந்த பலங்கள் அதிசயிதங்களாம். அநந்யப்ரயோஜநராய்ப் பற்றினார்க்கும் “சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம்ச்சைவ ஆநுஷங்கிகாந் ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி:” என்கிறபடியே பலாந்தரங்கள் ஆநுஷங்கிகமாக வரும். இவ்வர்த்தத்தை ஆநுஷங்க ஸித்தைச்வர்யரான ஸ்ரீகுலசேகரப் பெருமாளும் “நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” என்று அருளிச்செய்தார். “அபிலஷித துராப யே புரா காமயோகா ஜலதிமிவ ஜலௌதாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந:” என்று ஈசாண்டாலும் தாமருளிச் செய்த ஸ்தோத்ரத்திலே நிபந்தித்தார். இது வித்யாவிசேஷ ராகவிசேஷாதிநியதம்.

– ஒரு சிலர் மற்ற தேவதைகள் அனைத்தும் எம்பெருமானின் சரீரங்கள் என்று அறியாமல், அந்தத் தேவதைகளை ஆராதிப்பார்கள். இவர்கள் – ஆத்மா என்பதே இல்லை, உடல் மட்டுமே உண்மை என்னும் கருத்தை உடைய அரசசேவகன் ஒருவன், அந்த அரசனுக்கு ஆத்மா உள்ளது என்று அறியாமல் அரசனுக்குச் சந்தனம் பூசுதல் முதலான வேலைகளைச் செய்தபடி உள்ளது போன்றவர்கள் ஆவர். அந்தச் சேவகனின் செயலால் அரசனின் ஆத்மா மகிழ்வது போன்று, மற்ற தேவதைகள் குறித்த ஆராதனம் கண்டு, அவர்களைத் தனது சரீரமாக உடைய ஸர்வேச்வரன் மகிழ்வே கொள்கிறான். ஆனால், இந்தத் தேவதைகளின் ஆராதனம் மூலம் உண்டாகும் பலங்கள் அற்பமானவையாகவும் முழுமை இல்லாததாகவும் இருக்கும். கீதையில் (9-23) - யே அப்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயா அந்விதா: தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் – அர்ஜுனா! மற்ற தேவதைகளிடம் பக்தி கொண்டு, அவர்களை மிகவும் நம்பிக்கையுடன் ஆராதனை செய்பவர்கள் என்னையே மறைமுகமாக ஆராதனை செய்கின்றனர், ஆயினும் அவர்கள் சாஸ்த்ர வழிகளின்படி ஆராதனை செய்யாதவர்களே ஆவர் – என்றது காண்க. ஆனால் இப்படிப்பட்ட மற்ற தேவதைகள் எம்பெருமானின் சரீரங்கள் என்று அறிந்த கொண்டு, பலன்களை விரைவாகப் பெறவேண்டும் என்று எண்ணி, அந்தத் தேவதைகளின் ஆராதனை மூலம் பெறப்படும் பலங்கள் மிகவும் உயர்ந்தவையும், முழுமையானவையும் ஆகும். கீதையில் (7-16) - ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ – இழந்த செல்வத்தை மீண்டும் அடைய எண்ணுபவன், ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புபவன், புதிய செல்வங்கள் வேண்டுபவன் – என்று கூறியபடி சிறிய பலனுக்காக எம்பெருமானைப் பற்றுபவர்கள் மிகப்பெரிய பலன்களையே பெறுகின்றனர். வேறு பலன் எதனையும் எண்ணாமல், மோக்ஷத்தை மட்டுமே விரும்பி எம்பெருமானை அடைபவர்கள் குறித்து விஷ்ணுதர்மம் (74-43) - சரீராரோக்யமர்த்தாம்ச்ச போகாம்ச்சைவ ஆநுஷங்கிகாந் ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்கப்ரதோ ஹரி: - தன்னைத் த்யானித்தபடி இருப்பவர்களுக்கு ஸ்ரீஹரி, அவர்கள் விரும்பும் மோக்ஷம் மட்டும் அல்லாமல் அவர்களுக்குத் தேவையான உடல் ஆரோக்யம், செல்வம், போகங்கள் ஆகிய அனைத்தையும் அளிக்கிறான் – என்றது. ஆக இவர்களுக்கு இத்தகைய செல்வங்கள் அவர்களால் வேண்டப்படாமலேயே கிட்டிவிடுகிறது என்று கருத்து. இத்தகைய செல்வங்கள் தானாகவே கிட்டப்பெற்றவரான குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் (5-9) - நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் – உன்னை மட்டுமே வேண்டி, மற்றைய பெரும் செல்வம் வேண்டாமல் நிற்பவர்களிடம், அந்தச் செல்வங்கள் தாங்களாகவே வர விரும்புவது போன்று – என்றார். ஈசாண்டன் - அபிலஷித துராப யே புரா காமயோகா ஜலதிமிவ ஜலௌதாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந: - எந்தச் செல்வங்கள் நம்மால் முன்பு ஆசைப்பட்டபோது கிடைக்காமல் இருந்தனவோ, அவை அனைத்தும் நதிகள் கடலில் தாமாகவே சென்று விழுவது போன்று, இப்போது தாமாகவே எந்த முயற்சியும் செய்யாத நம்மிடம் ஓடிவருகின்றன – என்றது காண்க. ஒரு கேள்வி எழலாம் – ஏன் மோக்ஷம் மட்டுமே விரும்புபவர்களுக்கு மற்ற செல்வங்கள் கிட்டாமல் உள்ளன? இது அவர்கள் செய்யும் ஒருவகை த்யானம் காரணமாகவும், அவர்கள் பின்பற்றும் வித்யை காரணமாகவும், கடந்த பிறவிகளில் உண்டான விருப்பம் காரணமாகவும் ஆகும்.