Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 24)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

மூலம் - ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்குத் தான் கோலினதேயளவு, வேறு விளம்பா விளம்பங்களுக்குக் குறியில்லை. இந்நியமங்களெல்லாம் “ஸ்வாதந்த்ர்யமைச்வரம பர்யநுயோஜ்யமாஹு:” என்கிற நிரங்குச ஸ்வச்சந்ததையாலே ஸித்தங்களென்று ப்ரமாண பரதந்த்ரருக்கு ஸித்தம். இவ்வர்த்தங்கள் இப்படித் தெளியாதார்க்கே தேவதாந்தரங்கள் ஸேவ்யங்களென்னுமிடம் ப்ரதிபுத்தவர்ஜம் ஸேவ்யந்து என்று வ்யவஸ்தை பண்ணப்பட்டது.

– ப்ரபத்தி செய்தவன் மோக்ஷம் பெறத் தாமதம் செய்ய விரும்பினாலோ அல்லது மோக்ஷம் அடையாமல் இருக்க விரும்பினாலோ அல்லாமல் (அதாவது அவன் தாமதிக்க விருப்பம் கொண்டால் அன்றி), அவனுக்கு மோக்ஷம் பெறுவதற்குத் தாமதமோ அல்லது மோக்ஷம் கைகூடாமை என்பதோ இல்லை. இவை ப்ரமாணங்களை ஏற்பவர்களால் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளப்படும். இதன் காரணம் இது போன்ற செயல்கள் யாராலும் தடுக்க இயலாத ஈச்வரனின் ஸங்கல்பத்தால் நடைபெறுகின்றன. இதனை ஸ்ரீவைகுண்ட ஸ்தவம் (55) - ஸ்வாதந்த்ர்யமைச்வரம பர்யநுயோஜ்யமாஹு: - ஸர்வேச்வரனின் ஈச்வரத்தன்மை என்பது சுதந்திரமானது, யாராலும் கேள்வி கேட்க இயலாதது – என்று கூறியது. இப்படிப்பட்ட ஆழ்பொருட்களை அறியாமல் உள்ளவர்களுக்கே மற்ற தேவதைகளின் ஆராதனம் - ப்ரதிபுத்தவர்ஜம் ஸேவ்யந்து – விவேகம் இல்லாத மனிதர்களாலேயே மற்ற தேவதைகள் ஆராதிக்கப்படுகின்றனர் – என்று கூறப்பட்டது.