Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 23)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

மூலம் - ஸர்வேச்வரன் பக்கல் “யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ:” இத்யாதிகளிற்படியே அதிசயிதமான ஐச்வர்யாதிகளும் வரும். பின்பு விடாய்த்தீரக் கங்காஸ்நாநம் பண்ணப் பாபம் போமாப்போலே விஷயஸ்வபாவத்தாலே ஆநுஷங்கிகமாகப் பாபக்ஷயம் பிறந்து ரஜஸ்தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து ஸத்த்வோந்மேஷமுண்டாய் ஜநக அம்பரீஷ கேகயாதிகளுக்குப் போலே க்ரமேண மோக்ஷபர்யந்தமாய் விடும். மோக்ஷோபாய நிஷ்டனாம்போது “பஹூநாம் ஜந்மநாமந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே; யே ஜந்மகோடிபி: ஸித்தா: தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி:; ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி: நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்கிறபடியே விளம்பமுண்டு. மோக்ஷருசி பிறந்து வல்லதோருபாயத்திலே மூண்டால் “தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம்” என்கிறபடியே மோக்ஷஸித்திக்கு விளம்பமில்லை.

– ஸர்வேச்வரனிடமிருந்து ஒரு மனிதனுக்கு எல்லையற்ற ஐச்வர்யம் கிட்டும் என்பதை மஹாபாரதம் - யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: - ஆயிரம் கோடி யுகங்கள் விஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றி நான்முகன் ப்ரம்ம பதவி பெற்றான் – என்பதன் மூலம் அறியலாம். அதன் பின்னர் நிகழ்வது – தனது தாகம் தீர்த்துக்கொள்ள கங்கையில் இறங்கியவனின் பாவம் மறைமுகமாக அழிந்துவிடுவது போல, இவனது பாவங்களும் நீங்கிவிடுகிறது. அவனது ரஜஸ் மற்றும் தாமஸ குணங்கள் மெதுவாக மறைந்து, ஸத்த்வ குணம் மேலோங்குகிறது. அதன் பின்னர் அந்த மனிதன் – ஜநகன், அம்பரீஷன், கேகயன் போன்றவர்கள் போலே மோக்ஷம் பெறுகிறான். ஆனால் இவ்விதமான மோக்ஷம் உண்டாக சற்று தாமதம் ஏற்படலாம். இதனைக் கீழே உள்ள வரிகள் மூலமாக உணரலாம்: ஸ்ரீமத் பகவத் கீதை (7-19) - பஹூநாம் ஜந்மநாமந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே - புண்ணியம் நிறைந்த பல பிறவிகளுக்குப் பின்னர் ஒருவன் ஞானியாகி என்னை வணங்குகிறான். பௌஷ்கர ஸம்ஹிதை (38-305) - யே ஜந்மகோடிபி: ஸித்தா: தேஷாமந்தே அத்ர ஸம்ஸ்திதி: - பல கோடி பிறவிகளில் எம்பெருமானிடமிருந்து ஐச்வர்யம் போன்றவற்றைப் பெற்றவர்களே பக்தி முதலியவற்றில் நிலைநிற்பார்கள். பாஞ்சராத்ரம் - ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யான ஸமாதிபி: நரணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே – பல ஆயிரம் பிறவிகளில் செய்த தவம், த்யானம் மற்றும் யோகம் ஆகிய காரணங்களால் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்றவர்களே க்ருஷ்ணனிடம் பக்தியைப் பெறுவார்கள். ஆனால் மோக்ஷத்தின் மீது ஆழ்ந்த ருசி உண்டாகி, சிறந்த ஓர் உபாயத்தைக் கைக்கொள்ளும்போது, மோக்ஷம் உடனடியாகவே கிட்டிவிடுகிறது. இதனைக் கண்ணன் (கீதை: 12-7) - தேஷாமஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம் – யார் என்னிடம் மனம் வைத்தார்களோ அவர்களை, அவர்களுக்கு யமன் போன்றுள்ள ஸம்ஸாரக் கடலில் இருந்து மிகவும் விரைவாக நான் தூக்கிவிடுகிறேன் – என்றான்.