Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 22)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்
மூலம் - தேவதாந்தரங்கள் பக்கல் “காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா: க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா” என்கிறபடியே விஷமது துல்யங்களான க்ஷுத்ரபலங்கள் கடுக ஸித்திக்கும். அவை தாமும் “லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்; ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ: மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத:; அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய: ஸமுத்தித: ப்ரஹ்மாநுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத:” இத்யாதிகளிற்படியே பகவத்தீநங்கள். “யஸ்மாத் பரிமிதம் பலம். ஸாத்விகேஷு து கல்பேஷு மஹாத்ம்யமாதிகம் ஹரே: தேஷ்வேவ யோகஸம்ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்” என்கையாலே அவர்கள் பக்கல் மோக்ஷம் விளம்பித்தும் கிடையாது.
– மற்ற தேவதைகளை ஆராதிக்கும்போது, அற்பமான பலன்கள் உடனடியாகவே கிடைத்துவிடும். ஆனால் அவை விஷம் தடவிய இனிப்பு போன்றவையாகும். இதனைக் கீதையில் (4-12) - காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்தம் யஜந்த இஹ தேவதா: க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா – கர்மங்களுக்கான பலன் உடனடியாகக் கிட்டவேண்டும் என்று எண்ணுபவர்கள், இங்கு பல தேவதைகளையும் ஆராதிக்கின்றனர்; இதனால் இந்த உலகத்திலேயே கர்மங்களுக்கான பலன் வெகு விரைவாகக் கிடைத்து விடுகின்றது அல்லவோ – என்றான். அந்தத் தேவதைகளை அனைத்தும் தாங்கள் மனிதர்களுக்குப் பலன் அளிக்க பகவானையே அண்டியுள்ளன என்பதைக் கீழே உள்ள வரிகள் மூலம் உணரலாம்: ஸ்ரீமத் பகவத் கீதை (7-22) - லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந் – மற்ற தேவதைகளை ஆராதிப்பதால் அவற்றின் மூலம் பலனை அடைகிறான், அந்தப் பலன்கள் அவற்றுக்கு என்னாலேயே அளிக்கப்பட்டன. மஹாபாரதம் சாந்திபர்வம் (349: 76, 77) - ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதாமஹ: மயா அநுசிஷ்டோ பவிதா ஸர்வம்பூத வரப்ரத:; அஸ்ய சைவாநுஜோ ருத்ரோ லலாடாத்ய: ஸமுத்தித: ப்ரஹ்மாநுசிஷ்டோ பவிதா ஸர்வஸத்த்வ வரப்ரத: - தேவர்களிடம் எம்பெருமான், “இந்த நான்முகன் உங்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும் பிதாமகனாகவும் உள்ளான். எனது ஆணைக்கு ஏற்ப அனைத்து வரங்களையும் உங்களுக்கு அவன் அளிப்பான். எனது நெற்றியில் இருந்து தோன்றுபவனும், ப்ரம்மனுக்குப் பின்னால் வந்தவனும் ஆகிய சிவன் ப்ரம்மனின் கட்டளைகளுக்கு ஏற்ப அனைவருக்கும் அனைத்து வரங்களையும் அளிப்பான்”, என்றான். மஹாபாரதம் சாந்திபர்வம் (350-36) - யஸ்மாத் பரிமிதம் பலம் – அவர்கள் (ப்ரம்மன் முதலானோர்) அளிக்கும் பலன்கள் மிகவும் அற்பமானவை – என்பது காண்க. மத்ஸ்ய புராணம் (290-16) - ஸாத்விகேஷு து கல்பேஷு மஹாத்ம்யமாதிகம் ஹரே: தேஷ்வேவ யோகஸம்ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் – ஸத்த்வ குணம் மேலோங்கியுள்ள காலகட்டங்களில், ஸ்ரீஹரியின் மேன்மை ஓங்கியுள்ளது; அந்த மேன்மையில் மனதை நிலைநிறுத்தி, சாஸ்த்ர வழிகளில் யோகம் இயற்றுபவர்கள் மிக உயர்ந்த கதியைப் பெறுகின்றனர் – என்றது. இதன் மூலம் எத்தனை காலம் ஆனாலும் மற்ற தேவதைகளால் மோக்ஷம் என்பதை அளிக்க இயலாது என்றாகிறது.