Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 21)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

மூலம் - ஸத்யஸங்கல்பனான பகவான், ஒருவனை நிக்ராஹவனாக்கக் கோலினால் “ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா இந்த்ரோ மஹேந்த்ர: ஸுரநாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம்” என்கிறபடியே தேவதாந்தரங்கள் ரக்ஷிக்க சக்தரல்லர்கள். ஸர்வதேவதைகளும் ஸுக்ரீவமஹாராஜாதிகளைப் போலே தனக்கு அந்தரங்கபூதராயிருப்பாரும் தன்னையடைந்தானொருவனை நலிய நினைத்தால் “ஸக்ருதேவ ப்ரபந்நாய” என்கிறபடியே ஸத்யப்ரதிஜ்ஞனான தன் வ்ரதம் குலையாமைக்காக ராவணாதிகளைப் போலே துஷ்ப்ரக்ருதிகளாய் நிராகரிக்க வேண்டுவாரை நிராகரித்தும், ஸ்ரீவாநர வீரர்களைப் போலே ஸத்ப்ரவ்ருத்திகளாய் அநுகூலிப்பிக்க வேண்டுவாரை அநுகூலிப்பித்தும் ஸர்வேச்வரன் ரக்ஷிக்கும்.

– ஸத்யஸங்கல்பனாக உள்ள எம்பெருமான், ஒரு மனிதன் தன்னால் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று முடிவு செய்துவிட்டால், அந்த மனிதனை எந்த தேவர்களும் காக்கவல்லவர்கள் அல்லர் (யாராலும் காக்க இயலாது). இதனை இராமாயணம் ஸுந்தரகாண்டம் (51-45) - ப்ரஹ்மா ஸ்வயம்பூச்சதுராநநோ வா ருத்ராஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா இந்த்ரோ மஹேந்த்ர: ஸுரநாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் – ஒருவன் இராமனால் கொல்லப்பட வேண்டியவன் என்று முடிவான பின்னர், அவனை ப்ரம்மனால் காக்க இயலாது, மூன்று கண்கள் கொண்டவனாக மூன்று உலகங்களை அழித்தவனாக உள்ள சிவனால் காக்க இயலாது, தேவர்களின் தலைவன் என்றும் மஹேந்த்ரன் என்றும் போற்றப்படும் இந்திரனாலும் காக்க இயலாது – என்றது. ஆனால் ஒருவன் எம்பெருமானிடம் அடைக்கலம் என்று புகுந்துவிட்டான் என்றால் - அந்த மனிதனை அனைத்து தேவர்களும் எதிர்த்தாலும் சரி, வானர அரசனான சுக்ரீவன் போன்ற எம்பெருமானின் நெருங்கிய நண்பர்களே எதிர்த்தாலும் சரி, அந்த மனிதனை எம்பெருமான் ரக்ஷித்தே தீருவான். இராமாயணம் யுத்தகாண்டம் (18-33) - ஸக்ருதேவ ப்ரபந்நாய – ஒருமுறை சரணாகதி செய்தாலும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸத்யத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி குலையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, அந்த மனிதனைக் காத்தே தீருவான். இராவணன் போன்று அழிக்கப்பட வேண்டியவர்களை அழித்தும், வானரர்கள் போன்று இதமாகப் பேசவேண்டியவர்களிடம் இதமாகப் பேசியும் விபீஷணனைக் காத்தான் அல்லவோ?