Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்
எம்பெருமானுக்கும் மற்ற தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்
மூலம் - இப்படி ஞாநாதிகளில் மாறாட்டம் உடையார்க்கு தேவதாந்தரபக்தி உண்டேயாகிலும் பகவந்நிக்ரஹத்தாலே ப்ரத்யவாயமே பலிக்கும். ஆகையால், “த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய” என்கிறபடியே மோஹநசாஸ்த்ரங்களிலே த்ருஷ்டபல ஸித்தியை உண்டாக்கினதுவும் அவற்றையிட்டு மோஹிப்பித்து நரகத்திலே விழவிடுகைக்காக வத்தனை.
– இப்படிப்பட்டவர்கள் மற்ற தேவதைகளிடம் பக்தியுடன் உள்ளபோதிலும், தங்கள் அறிவுமயக்கம் காரணமாகப் பகவானால் தண்டிக்கப்பட்டு, பாவங்களையே தழுவுவார்கள். வராஹ புராணம் (70-36) - த்வம் ஹி ருத்ர மஹாபாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய தர்சயித்வா அல்பமாயாஸம் பலம் சித்ரம் ப்ரதர்சய – நீண்ட கைகள் கொண்ட ருத்ரனே! மக்களுக்கு மயக்கம் உண்டாக்கக் கூடிய சாஸ்த்ரங்களை நீ இயற்றுவாயாக! அவற்றில் மிகவும் குறைவான சிரமங்கள் மூலமே, விரைவான பலன் கிட்டும் என்று போலியாகக் காண்பிப்பாயாக – என்று கூறியது. இதன் மூலம் மயக்கம் உண்டாக்கவல்ல அந்த சாஸ்த்ரங்கள் விரைவான பலனை அளிப்பதாக உள்ளபோதிலும், அவை மனிதர்களை மயக்கி நரகத்தில் விழவைக்கும் வலிமை கொண்டவை என்று அறியவேண்டும்.