Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ப்ரம்மன், ருத்ரன் போன்றோர் பரதேவதை அல்லர்

இத்தேவதைகளில் ப்ரதாநராகச் சொல்லுகிற ப்ரம்மருத்ரேந்த்ராதிகளுக்குக் கார்யத்வ கர்மவச்யத்வங்கள் ப்ரமாணிகங்களாகையாலும், “ஆபூதஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹாந் | ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண: ப்ரபு:”, “ஆத்யோ நாராயணோ தேவ: தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ:”, “பரோ நாராயணோ தேவ: தஸ்மாத் ஜாதச்சதுர்முக: | தஸ்மாத் ருத்ரோ அபவதேவி” இத்யாதிகளிலே, “ததஸ்த்வமாபி துர்தர்ஷ: தஸ்மாத் அபவாத் ஸநாதநம் | ரக்ஷார்த்தம் ஸர்வபூதாநாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந்” என்கிறபடியே ஸ்வேச்சாவதீர்ணனாய் த்ரிமூர்த்தி மத்யஸ்தனான விஷ்ணு நாராயணாதி சப்தவாச்யன் தானே தன்னுடைய பூர்வாவஸ்தையாலே ஸர்வஜகத்துக்கும் காரணமென்கையாலும், “நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம் | ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதநம்” என்கிறபடியே அவனே நித்யனென்கையாலும், த்ரிமூர்த்திகளும் ஸமரென்றும், த்ரிமூர்த்திகள் ஏகதத்த்வமென்றும், த்ரிமூர்த்யுத்தீர்ணன் ஈச்வரனென்றும், த்ரிமூர்த்திகளுக்குளே ப்ரஹ்மாவாதல், ருத்ரனாதல் ஈச்வரனென்று சொல்லுகிற ஸாம்ய ஐக்ய உத்தீர்ண வ்யக்த்யந்தரபக்ஷங்கள் தடியா.

– தேவதைகளில் ப்ரதானமாக உள்ளவர்கள் என்று கூறப்படும் ப்ரம்மன், ருத்ரன் மற்றும் இந்த்ரன் ஆகியோர் கர்மவசப்பட்டவர்கள் என்பது பல ப்ரமாணங்கள் மூலம் அறியலாம். அடுத்துள்ள பல வரிகள் காண்க: மஹாபாரதம் சாந்தி பர்வம் (210-24) - ஆபூதஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹாந் ஏகாஸ்திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண: ப்ரபு: - பஞ்சபூதங்கள் லயத்தை அடைந்தபோது, மஹத் என்பது ப்ரக்ருதியில் லயித்தபோது, அனைத்தின் ஆத்மாவான ஒருவன் மட்டுமே உள்ளான், அவனே அனைத்தின் ப்ரபுவான நாராயணன்; ஸ்ரீவராஹபுராணம் (25-6) - ஆத்யோ நாராயணோ தேவ: தஸ்மாத் ப்ரஹ்மா ததோ பவ: - தொடக்கத்தில் நாராயணன் மட்டுமே உள்ளான்; அவனிடமிருந்து ப்ரம்மன் தோன்றினான்; ஸ்ரீவராஹபுராணம் (90-3) - பரோ நாராயணோ தேவ: தஸ்மாத் ஜாதச்சதுர்முக: தஸ்மாத் ருத்ரோ அபவதேவி – தேவியே! நாராயணனே மேலான தெய்வம்; அவனிடமிருந்து நான்முகன் (ப்ரம்மன்) தோன்றினான்; ப்ரம்மனிடமிருந்து ருத்ரன் தோன்றினான். மேலும், இராமாயணம் உத்தர காண்டம் (101-26) - ததஸ்த்வமாபி துர்தர்ஷ: தஸ்மாத் அபவாத் ஸநாதநம் ரக்ஷார்த்தம் ஸர்வபூதாநாம் விஷ்ணுத்வமுபஜக்மிவாந் – ப்ரம்மன் கூறுவது: யாராலும் வெல்ல முடியாதவனாகிய நீ, அனைவரையும் காக்கும் பொருட்டு, நாராயணன் என்னும் உயர்ந்த ரூபத்திலிருந்து விஷ்ணுவாகத் தோன்றினாய் – போன்ற வரிகள் மூலம், தன்னுடைய விருப்பம் காரணமாகவே நாராயணன், மூன்று மூர்த்திகளில் நடுநாயகமான விஷ்ணுவாகத் தோன்றினான் என்பது விளங்கும். விஷ்ணு, நாராயணன் என்னும் பல திருநாமங்களால் கூறப்படும் அவனே, அவனது அனைத்து நிலைகளிலும் இந்த உலகின் காரணமாக உள்ளான். மஹாபாரதம் சாந்திபர்வம் (347-32) - நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம் ருதே தமேகம் புருஷம் வாஸுதேவம் ஸநாதநம் – எப்போதும் உள்ளவன் என்று முழங்கப்படும் புருஷனாகிய வாஸுதேவனைத் தவிர இந்த உலகில் தாவரமோ மற்ற விலங்குகளோ நிரந்தரமாக இருப்பதில்லை – என்று கூறியது. இதன் மூலம் அவனே நித்யன் என்பது விளங்குகிறது. மேலே கூறப்பட்ட பல காரணங்களால் – மூன்று மூர்த்திகளும் சமம், மூன்று மூர்த்திகளும் ஒன்று, மூன்று மூர்த்திகளுக்கும் மேலான ஈச்வரன் ஒருவன், மூன்று மூர்த்திகளுக்குள் ஈச்வரன் என்பது ப்ரம்மனோ அல்லது ருத்ரனோ ஆவார்கள் – என்று கூறப்படும் வாதங்கள் தள்ளப்படுகின்றன. இந்த வாதங்கள் மூலம் வெளிப்படும் சமத்வம், ஒரே தன்மை, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஒன்று போன்ற கருத்துக்கள் அனைத்தும் ப்ரமாணங்களுக்கு முரணாக உள்ளன.