Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 6.பரதேவதாபாரமார்த்ய அதிகாரம்

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகஸமதிகதா துல்யதைக்யம் த்ரயாணாம் அந்யத்ர ஐச்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ: ஆத்ரியந்தே ந ஸந்த: த்ரயந்தை: ஏககண்டை: தத் அநுகுண மநு வ்யாஸ முக்ய உக்திபி: ச ஸ்ரீமாந் நாராயணோ ந: பதி: அகிலதநு: முக்தித: முக்தபோக்ய:

– சாஸ்த்ர ஞானம் அற்றவர்கள் கூறுவது – ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே, இந்திரன் முதலான தேவதைகள் ஒன்றே, ப்ரம்மன் உள்ளிட்ட மூன்று மூர்த்திகளின் தன்மைகளை அறிந்து கொண்டால் அவர்கள் ஒன்றே,இவர்களின் ஆத்மஸ்வரூபம் ஒன்றே, இவர்கள் மூவரைக் காட்டிலும் மேலான ஒருவனே ஈச்வரன் – போன்றவையாகும். உண்மை எது, பொய் எது என்று பிரித்து அறியக்கூடியவர்கள், இந்தச் சொற்களை உண்மை என்று ஏற்பதில்லை. அனைத்து உபனிஷத்துக்களும் ஒரே கருத்தை முழங்குகின்றன, இந்த உபனிஷத்துக்களின் கருத்தைப் பின்பற்றியே மனு, வ்யாஸர் முதலானவர்களின் ஸூக்திகள் உள்ளன, இந்தக் கருத்து என்னவெனில் – அனைத்தையும் சரீரமாகக் கொண்டவன், மோக்ஷத்தை அளிக்கக்கூடியவன், முக்தர்களால் அனுபவிக்கக்கூடியவன் பெரியபிராட்டியுடன் கூடியுள்ள நாராயணனே ஆவான்; அவனே நமக்கும் அனைவருக்கும் எஜமானன் – என்பதாகும்.