Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 50)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

திவ்யதம்பதிகளின் செயல்கள்

மூலம் – “சாஸ்த்ரஞானம் பஹுக்லேசம் புத்தேச்வலந காரணம் | உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் ஸர்வகர்மஸு” என்கிறது உபயுக்தமான ஸாராம்சத்தைக் கடுக ச்ரவணம் பண்ணி க்ருஷி பண்ணாதே உண்ண விரகுடையவன் க்ருஷி சிந்தையை விடுமாப்போலே விரிவுகற்கைக்கு ஈடான சாஸ்த்ராப்யாஸாதிகர்மங்களில் உபரதனாய்க் கடுக மோக்ஷோபாயத்திலே மூள ப்ராப்தமென்றபடி.

– மேலே உள்ள ச்லோகத்தின் பொருள் – சாஸ்த்ரஞானம் என்பது மிகுந்த கடினத்தால் மட்டுமே கிட்டுகிறது; அப்படிக் கிட்டிய ஞானத்தால் புத்தி கலங்கக்கூடும்; ஆகவே ஆசார்யன் மூலமாக எம்பெருமானைப் பற்றி அறிந்து கொண்டு, அதன் பின்னர் சாஸ்த்ரஞானம் பெறுவதற்கான செயல்களை நிறுத்தி விடவேண்டும் – என்பதாகும். இதன் பொருளானது, சாஸ்த்ரங்களை அறிவதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதல்ல. இதன் மூலம் கூறப்படுவது - சாஸ்த்ரத்தின் எந்தப் பகுதிகள் அவசியமோ அவற்றை மிகவும் வேகமாக அறிந்து கொண்டு, அவை மூலமாக மோக்ஷத்திற்கான உபாயங்களை நாடவேண்டும்; அதனை விடுத்து அவற்றை மேலும் ஆராய்ந்து, அவை கூறும் உபாயங்களை செயலாற்றுவதில் தாமதம் செய்யக்கூடாது – என்பதாகும். தனக்குத் தேவையான உணவு உள்ள ஒருவன், விவசாயம் செய்வதைப் பற்றி எண்ணமாட்டான். இது போன்றே தாமதம் செய்யாமல் மோக்ஷ உபாயங்களில் ஈடுபடவேண்டும்.