Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 49)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

திவ்யதம்பதிகளின் செயல்கள்

மூலம் - இப்படி மூன்று தத்வங்களாக வகுத்துச் சிந்தித்தாற்போலே ஸர்வவிசிஷ்டவேஷத்தாலே ஈச்வரன் ஏகதத்வமாக அநுஸந்திப்பார்க்கும், ஈச – ஈசிதவ்யங்கள், ஆத்மா – அநாத்மாக்கள், உபாய – உபேயங்களென்றாற்போலே இரண்டு அர்த்தம் ஞாதவ்யமாக வகுப்பார்க்கும், ரக்ஷ்யம் – ரக்ஷகன், ஹேயம் – உபாதேயம் என்று இப்புடைகளிலே அர்த்தசதுஷ்டயம் ஞாதவ்யமாக ஸங்க்ரஹிப் பார்க்கும், முன்பு சொன்னபடியே அர்த்தபஞ்சகம் ஷடர்த்தங்களென்று விவேகிப்பார்க்கும், ரஹஸ்ய சாஸ்த்ரங்களிற்படியே ஸப்த – பதார்த்த – சிந்தாதிகள் பண்ணுவார்க்கும் அவ்வோ ஞானாநுஷ்டான – ப்ரதிஷ்டாரூபங்களான ப்ரயோஜநவிசேஷங்கள் கண்டு கொள்வது.

– நாம் இங்கு தத்வங்களை மூன்றாகப் பிரித்துள்ளோம். ஒரு சிலர் ஈச்வரன் மட்டுமே தத்துவம் என்றும், மற்றவை அவனது தன்மைகள் என்றும் கூறுவார்கள். ஒரு சிலர் தத்வங்களை இரண்டாகப் பிரிப்பார்கள். அவையாவன: ஈச்வரன் – அவனுக்கு அடங்கியவை, ஆத்மா – ஆத்மா அல்லாதவை, அடையவேண்டியவழி – அடையப்படும் இடம் போன்றவை ஆகும். ஒரு சிலர் நான்கு விதமாகக் கூறுவார்கள் – ரக்ஷிப்பவன், ரக்ஷிக்கப்படும் வஸ்து, விலக்கப்பட வேண்டியவை, ஏற்கப்படவேண்டியவை – என்பவை ஆகும். மேலும் சிலர் அறிய வேண்டியவை அர்த்தபஞ்சகம் என்னும் ஐந்து என்றும், வேறு சிலர் ஆறு என்றும் கூறுவார்கள். ரஹஸ்யசாஸ்த்ரங்களில் அறியப்பட வேண்டியவை ஏழு என்று கூறப்படுகின்றன (ஏழு = ஈச்வரன், அவித்யை, கர்மம், காலம், கடமை, இயற்றவேண்டிய முறை, சமமாக இருத்தல்). அந்தந்த சிந்தனைகளில், அவரவர்களுக்கு ஏற்ற நன்மைகளும், பலன்களும் உள்ளன.