Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 47)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
திவ்யதம்பதிகளின் செயல்கள்
மூலம் - இவ்விடத்தில், தண்டதரத்வமும், புருஷகாரத்வாதிகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வ்யாபாரங்கள். உபதிச்யமான தர்மாதாரத்திற் காட்டில் அதிதிச்யமான தர்மாதாரத்துக்கு விசேஷம் ஸ்வத:ப்ராப்தம் என்று உவர் அருளிச்செய்ததுக்கும் இப்படி விபாகத்தால் வந்த வைஷம்யத்திலே தாத்பர்யம். இது “யுவத்வாதௌ துல்யே அபி” என்கிற ச்லோகத்திலே நிர்ணிதம். “இறை நிலையுணர்வரிது” என்று ஆழ்வார் அருளிச் செய்த நிலத்திலே ஏதேனுமொரு வ்ருதாநிர்ப்பந்தம் ஆகாது. “க்ருசாநர்தாம்ஸ்தத: கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே” என்கிறபடியே தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்ததெல்லாம் ஸாதிக்கலாயிருக்கச் செய்தேயிறே நாம் ப்ரமாண சரணராய்ப் போருகிறது. ஆகையால் இவ்வீச்வரத்வத்தையும் ஈசிதவ்யதத்வங்களையும் யதாப்ரமாணம் தெளியப் ப்ராப்தம்.
– இந்த இடத்தில் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் உள்ள செயல்பாடுகளின் வேறுபாட்டை நாம் அறியவேண்டும். எம்பெருமான் தவறு செய்பவர்களைத் தண்டித்தபடி உள்ளான். பிராட்டியோ, அவ்விதம் தவறு செய்பவர்களை மன்னிக்கும்படி எம்பெருமானிடம் கூறியபடி உள்ளாள். மீமாம்ஸகர்கள் கூறுவது – ஒரு பொருளானது எந்தத் தன்மையால் மற்றொரு பொருள் போன்றே உள்ளது எனக் கூறப்பட்டதோ, அதே தன்மையால் அந்தப் பொருளைக் காட்டிலும் வேறுபட்டதாகவும் இருக்கும் – என்பதாகும் (இங்கு எம்பெருமான் மற்றும் பிராட்டியின் ஸங்கல்பம் என்பது இவ்விதமே ஆகும் என்பதை அறியலாம்). ஆக இங்கு எம்பெருமானுக்கும் பெரியபிராட்டிக்கும் உள்ள வேறுபாடு என்பது, அவர்களின் செயல்பாடுகளில் என்று அறியவேண்டும். இதனை பராசரபட்டர் அருளிச்செய்த ஸ்ரீகுணரத்நகோசம் (14) - யுவத்வாதௌ துல்யே அபி – ஸ்ரீரங்கநாயகி! உங்கள் இருவருக்கும் இளமை முதலான குணங்கள் ஒன்றாக இருந்தாலும், எம்பெருமானிடம் ஸ்வதந்த்ரமானவன், விரோதிகளை அழித்தல், ஸங்கல்பம் போன்றவை உள்ளன; உன்னிடம் பெண்மைக்கு உரிய மென்மை, கணவனுக்கு அடங்கி இருத்தல், கருணை போன்றவை உள்ளன – என்ற ச்லோகத்தின் மூலம் அறியலாம். ஈச்வரனின் உண்மையான நிலையை அறிவது கடினம் என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் (1-3-6) - இறை நிலையுணர்வரிது – அருளிச்செய்தார் அன்றோ? இது போன்ற விஷயங்களில் வீணாக நிர்ப்பந்தம் செய்வது சரியல்ல. மஹாபாரதம் ஸபாபர்வம் (39-5) - க்ருசாநர்தாம்ஸ்தத: கேசித் க்ருசாம்ஸ்தத்ர குர்வதே – சிலர் சிறிய விஷயங்களையும் பெரிதாக்குகின்றனர் – என்று கூறியது. நாம் நமது வாதங்களை நமக்கு உள்ள தர்க்கம் செய்யும் அறிவைக் கொண்டே நிரூபித்துவிட இயலும். ஆனால் இவ்விதம் செய்யாமல், சிறிய விஷயங்களுக்கும் சாஸ்த்ர ப்ரமாணம் வேண்டுகிறோம். ஆகவே இந்த ஈச்வர தத்வத்தையும் சாஸ்த்ரம் மூலமே அறியவேண்டியதாகிறது.