Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 44)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

அர்ச்சாவதாரமும் மோக்ஷம் அளிக்கவல்லது

மூலம் - இப்படியே அர்ச்சாவதாரமும் மிறுக்கிற மோக்ஷத்தைத் தருமென்னுமிடத்தை, “ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்ந வதநேக்ஷணாம் | க்ருத்வா ஆத்மந: ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி:”, “தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத் | விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம்” என்று ஸ்ரீசௌநகபகவான் அருளிச் செய்தான். ஆழ்வார்களுக்கும் இவ்வவதார ரஹஸ்யத்தையும், அர்ச்சாவதார வைலக்ஷண்யத்தையும் ப்ரசுரமாக அனுஸந்தித்து, இதற்குப் பேரணியாக பரத்வத்தைக் கண்டு போந்தார்கள்.

இது போன்றே அர்ச்சாவதாரமும் எந்தவிதமான சிரமமும் இன்றி மோக்ஷம் அளிக்கவல்லதே ஆகும். இதனைச் சௌநக பகவான் ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் (103-16, 29, 30) - ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ: ப்ரஸந்ந வதநேக்ஷணாம் | க்ருத்வா ஆத்மந: ப்ரீதிகரீர் ஸுவர்ண ரஜதாதிபி: || தாமர்சயேத்தாம் ப்ரணமேத்தாம் யஜேத்தாம் விசிந்தயேத் | விசத்யபாஸ்ததோஷஸ்து தாமேவ ப்ரஹ்மரூபிணீம் - தங்கம், வெள்ளி முதலானவற்றைக் கொண்டு, அழகான உருவம் கொண்டதாக, தெளிவான திருமுகம் மற்றும் கண்கள் கொண்டதாக, காண்பவர்களுக்கு இன்பத்தை அளிக்கவல்லதாக உள்ள விஷ்ணு பிம்பத்தை வடித்து, அதனை அர்ச்சனை செய்து வணங்கவேண்டும், இபடியாக த்யானிப்பதன் மூலம், தன்னுடைய தோஷங்கள் அனைத்தும் கழியப்பெற்று, ப்ரஹ்ம ரூபமான அந்த விக்ரஹத்தையே அடைந்துவிடுகிறான் – என்றார். இப்படியாக உள்ள அர்ச்சாவதார ரஹஸ்யத்திலும், இதில் உள்ள மேன்மைகளையும் உணர்ந்த ஆழ்வார்கள், அர்ச்சாவதாரத்திலேயே மூழ்கினர். இவற்றின் மூலாதாரமாக பரம்பொருளையே கண்டனர்.