Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 43)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
அந்தர்யாமி ரூபம் குறித்த விளக்கம்
மூலம் - இப்படி அவதரிக்கிற ரூபங்களில் வகைகளெல்லாம் சுத்தஸத்வ த்ரவ்யமயங்களாய் கர்மதத்பலங்களோடு துவக்கற வருகையாலே சுத்தஸ்ருஷ்டியென்று பேர்பெற்றிருக்கும். இவ்வதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும், இவற்றில் ஈச்வரனுக்கு ஞானாதி ஸங்கோசமில்லையென்றும், இவ்விக்ரஹங்கள் சுத்தஸத்த்வமயங்களென்றும், இவற்றிற்கு ஈச்வரேச்சாமாத்ரமே காரணமென்றும், தர்மரக்ஷணம் பண்ண வேண்டும் காலமே காலமென்றும், ஸாதுபரித்ராணாதிகளே ப்ரயோஜனங்களென்றும், இவ்வர்த்தம் தெளிந்து அனுஸந்திப்பார்க்கு ஏகஜன்மத்திலே ஸ்வாதிகாரானுகுண ஸமீஹிதோபாய பூர்த்தியாலே ஜன்மாந்தரம் அனுபவியாதே முக்தராகலாமென்றும், “பஹூநி மே வ்யதீதாநி” என்று தொடங்கி ஐந்து ச்லோகத்தாலே கீதாசார்யன் அருளிச் செய்தான். இது ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு சரண்யகுணாவிசேஷ ஞானமுகத்தாலே உபாயானுஷ்டானக்ஷணத்திலே மஹாவிச்வாஸாதிகளை ஸ்திரீகரித்து உபகாரகமாம்.
இவ்விதமாக எம்பெருமான் அவதாரம் செய்யும் ரூபங்கள் அனைத்தும் சுத்தஸத்வங்கள் ஆகும். இவை கர்மத்துடனோ அல்லது கர்ம பலன்களுடனோ ஸம்பந்தம் பெற்றவை அல்ல. எனவே இவை சுத்த ஸ்ருஷ்டி எனப்படும். இந்த அவதாரங்கள் அனைத்தும் உண்மையானவை, இவற்றில் ஈச்வரனுக்கே உரித்தான ஞானம் மற்றும் உள்ள குணங்களுக்குக் குறைவில்லை, இந்த அவதாரங்கள் அனைத்தும் சுத்தஸத்வ விக்ரஹங்கள், இந்த அவதாரங்களுக்குக் காரணம் ஈச்வரனின் விருப்பம் மட்டுமே, இவை எப்போது வெளிப்படும் என்றால் தர்மத்தை நிலை நிறுத்த வேண்டிய காலங்களில் மட்டுமே, இவற்றின் நோக்கம் ஸாதுக்களைக் காப்பதே; இந்த அவதாரங்களைக் குறித்து இப்படியாக உள்ள உண்மைகளை ஒரு சிலர் புரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்தப் பிறப்பிலேயே மோக்ஷம் பெற்று விடுகின்றனர், அவர்களுக்கு மேலும் பிறவிகள் இல்லை, இவர்கள் தங்கள் அதிகாரம், தகுதிகளுக்கு ஏற்ப அனைத்தையும் பெறுகின்றனர். இவை அனைத்தையும் கண்ணன் கீதையில் - பஹூநி மே வ்யதீதாநி (4-5) - என்ற ச்லோகம் தொடங்கி அருளிச் செய்தான். விபவ அவதாரங்கள் குறித்த த்யானம் மூலமாகக் கிட்டுவது என்ன? மோக்ஷத்தில் விருப்பம் கொள்ளும் ஒருவனுக்கு, தன்னை மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லும் உபாயம் ப்ரபத்தி மட்டுமே என்று அறியும் ஒருவனுக்கு - இத்தகைய விபவ அவதார த்யானம் என்பது எந்த ஒரு பரம்பொருளை சரணம் என்று புகுந்து விடுகிறானோ, அந்தப் பரம்பொருளின் குணங்கள் குறித்த ஞானத்தை உண்டாக்கிவிடுகிறது. இதன் மூலம் அவனுக்கு மஹாவிச்வாசம் உண்டாகிவிடுகிறது.