Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 40)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

விபவ ரூபம் குறித்த விளக்கம்

மூலம் - விபவங்களாவன பத்மநாபாதிகளான முப்பத்துச் சின்ன ரூபங்கள். இவற்றில் மத்ஸ்ய கூர்மாதிகளான அவதாரங்கள் ஒரு ப்ரயோஜனவசத்தாலே விசேஷித்துச் சொல்லப்பட்டன. இவ்விபவங்களில் ஈச்வரன் அவ்வோ கார்யவிசேஷங்களுக்கு ஈடாகத்தான் வேண்டின குணங்களை வேண்டினபோது மறைத்தும், வேண்டினபோது ப்ரகாசிப்பித்தும் நடத்தும். இவற்றில் அவாந்தரபேதங்கள் க்ருஷ்ணரூபாண்யஸங்க்யாநி இத்யாதிகளிற்படியே அநந்தங்கள். இப்படியே விபவாந்தரங்களும் கண்டு கொள்வது. சில ஜீவர்களை விக்ரஹ விசேஷத்தாலும் சக்தி விசேஷத்தாலும் அதிஷ்டித்து அதிசயித்த கார்யங்களை நடக்கிறதுவும் விபவபேதம்.

விபவங்கள் என்பவை பத்மநாபன் முதலான முப்பது ரூபங்கள் ஆகும். இந்த முப்பதில் மத்ஸ்யம், கூர்மம் போன்றவை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக வெளிப்பட்டதாகும். இத்தகைய விபவ அவதாரங்களில், அந்த அவதாரத்திற்கு ஏற்ப, தான் அந்த அவதாரம் எடுத்த நோக்கத்திற்கு ஏற்ப, ஈச்வரன் தனது ஒரு சில குணங்களை மட்டுமே வெளிப்படுத்தியும், சில குணங்களை மறைத்தபடியும் உள்ளான். இவைகளில் உள்ள உட்பிரிவுகளுக்கு கணக்கில்லை. பாஞ்சராத்ர ஆகமம், “க்ருஷ்ண ரூபாண்யஸங்க்யாநி - கண்ணனின் ரூபங்கள் எல்லையற்றவை”, என முழங்கியது. விபவ அவதாரங்களில் உள்ள பலவற்றையும் சாஸ்த்ரங்கள் மூலம் உணரலாம். ஒரு சில ஜீவன்களுக்குள் ஈச்வரன் தன்னுடைய ரூபத்துடனோ அல்லது சக்தியை மட்டுமோ புகுத்தி எண்ணற்ற அதிசயங்களைச் செய்கிறான். இவையும் விபவங்களின் பிரிவே ஆகும்.