Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 36)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தத்வம் – 3 – ஈச்வரன் - ஈச்வரனுடைய ஸ்வரூபத்தை நிரூபிக்கக்கூடிய சிறப்புகள்

மூலம் - இப்படி ஸ்வாதீந ஸர்வஸத்தாதிகளையுடையவனாயிருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய், ஜ்ஞானமாய், அநந்தமாய், ஆனந்தமாய், அமலமாயிருக்கும். இவ்வர்த்தத்தை “நந்தா விளக்கேயளத்தற்கரியாய்” என்றும், “உணர்முழுநலமெ”ன்றும், “சூழ்ந்ததனிற் பெரிய சுடர்ஞானவின்பம்” என்றும், “அமலன்” என்றும் இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அனுஸந்தித்தார்கள்.

இப்படியாக அனைத்தும் தங்களது இருப்பிற்குச் சார்ந்துள்ள ஈச்வரனின் ஸ்வரூபமானது ஸத்யம், ஞானம், அனந்தம் (எல்லையற்றது), ஆனந்தம், தூய்மை என்பதாகவே உள்ளது. இத்தன்மைகளை ஆழ்வார்கள் கீழே உள்ளபடி அனுபவித்தனர்: பெரியதிருமொழி (3-8-1) - நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் - எப்போதும் அழியாமலும், அளவிடக் கடினமாகவும் உள்ளவனே; திருவாய்மொழி (1-1-2) - உணர்முழு நலம் - ஆனந்தமும் ஞானமும் முழுமையாக உள்ளவன்; திருவாய்மொழி (10-10-1) - சூழ்ந்ததனிற் பெரிய சுடர்ஞானவின்பம் - உயர்ந்தவற்றிலும் உயர்ந்தவன், ஞானமயமானவன், ஆனந்தமயமானவன்; அமலனாதிபிரான் (1) - அமலன் - தூய்மையானவன், தோஷங்கள் அற்றவன் – என்பது காண்க.