Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 35)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
அனைத்தும் ஈச்வரனுக்கு ஏற்புடையதாக இருத்தலே இயல்பு
மூலம் - ஆகையால் ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஸ்வபாவ ஸித்தாநுகூல்யம் ஈச்வரேச்சாயத்தம். இத்தாலே ஈச்வரனுக்கும், நித்யருக்கும், முக்தருக்கும் ஸர்வமும் அநுகூலமாயிருக்கும். பத்தருக்குக் கர்மாநுரூபமாகப் புருஷபேதத்தாலும் காலபேதத்தாலும் இவற்றில் ப்ராதிகூல்யங்களும் அல்பாநுகூல்யங்களும் நடவாநிற்கும். இப்பத்தர் தங்களுக்கும் ஸ்வாத்மஸ்வரூபம் ஸர்வதா அனுகூலமாக ஈச்வரேச்சாஸித்தம். இப்படி அநுகூலமான ஆத்மஸ்வரூபத்தோடே ஏகத்வ ப்ரமத்தாலும் கர்மவசத்தாலுமிறே ஹேயமான சரீரம் ஞாநாஹீநருக்கு அனுகூலமாய்த் தோற்றுகிறது. இவற்றுக்குக் கர்மாபாதிகமான ப்ரதிகூலரூபத்தாலே முமுக்ஷுவைப் பற்ற த்யாஜ்யத்வம். ஸ்வாபாவிகமான அநுகூல ரூபத்தாலே முக்தனைப் பற்ற அவை தமக்கே உபாதேயத்வம். அஹங்கார மமகார யுக்தனாய்க் கொண்டு தனக்கென்று ஸ்வீகரிக்குமவையெல்லாம் ப்ரதிகூலங்களாம். ஸ்வரூபஞானம் பிறந்து ஸ்வாமிசேஷமென்று காணப்புக்கால் எல்லாம் அநுகூலமாம். இவ்வர்த்தம் பரிபூர்ணப்ரஹ்மானுபவம் சொல்லுமிடத்திலே பரக்கச் சொல்லக்கடவோம்.
எனவே ஈச்வரனின் ஸங்கல்பம் காரணமாக, அனைத்து வஸ்துக்களும் தங்கள் இயல்பாகவே ஏற்கக்கூடியவைகள் என்று விளங்குகிறது. இதன் மூலம் அனைத்தும் ஈச்வரனுக்கு, நித்யஸூரிகளுக்கு, முக்தர்களுக்கு ஏற்புடையதாக உள்ளன என்று அறியலாம். ஆனால் ஸம்ஸாரத்தில் பிணைக்கப்பட்டவர்களுக்கு, அவரவர்களின் கர்மங்களுக்கு ஏற்ப ஒரு சில வஸ்துக்கள், ஒரு சில நேரங்களில் ஏற்புடையவையாகவும், மற்ற சில நேரங்களில் ஏற்க இயலாதவையாகவும் உள்ளன. ஆனால் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்கும், ஈச்வரனின் விருப்பம் காரணமாக, அவரவர்களின் ஆத்மஸ்வரூபம் ஏற்புடையதாகவே உள்ளது. இப்படியாக ஆத்மா மட்டுமே ஏற்புடையதாக எண்ணப்படும்போது, ஒரு சிலருக்குத் தங்கள் கர்மம் காரணமாக, தங்களின் உடலே ஆத்மா என்ற எண்ணம் மேலிட, அதனால் உடலும் ஏற்கக்கூடியது என்ற சிந்தனை உண்டாகி, உடலின் மீது அபிமானம் வந்துவிடுகிறது. ப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகள் அனைத்தும் ஒருவனைக் கர்மத்தில் ஈடுபடுத்திவிடும் இயல்பு கொண்டதால், மோக்ஷத்தில் விருப்பம் கொண்ட ஒருவன் அவற்றின் மீது உள்ள பற்றுதல்களை விலக்கவேண்டும். ஆனால் முக்தன் ஒருவனுக்கு இவை ஏற்கக்கூடியதாக (எந்தப் பாதிப்பும் உண்டாக்காமல் உள்ளதாக) இருப்பதால், இவற்றை விலக்கவேண்டிய அவசியம் இல்லை. இவை அனைத்தையும் “நான், எனது” என்னும் எண்ணத்துடன் கைக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும். இவை அனைத்தும் ஒருவனுக்கு எப்போது ஏற்கும்படியாக உள்ளது என்றால், “தன்னுடைய ஸ்வரூப ஞானத்தை உணர்தல், இவை அனைத்தும் எம்பெருமானுக்காகவே உள்ளன என்ற எண்ணம் இருத்தல்”,என்ற நிலையில் ஆகும். இவை அனைத்தையும் ப்ரஹ்மத்தின் பூர்ணம் மற்றும் ஆனந்தம் பற்றிக் கூறும்போது விரிவாக விளக்குவோம்.