Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 31)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

சுத்தஸத்வத்தின் ஸ்வரூபம், ஸ்திதி, ப்ரவ்ருத்தி

மூலம் - சுத்தஸத்வத்துக்கு ஸ்வரூபபேதம் ரஜஸ் தமஸ்ஸுக்களோடு கலவாத ஸத்த்வகுணாச்ரயமாயிருக்கை. இதின் ஸ்திதிபேதம் நித்யமான மண்டப கோபுராதிகளிலும் ஈச்வரனுடையவும் நித்யருடையவும் விக்ரஹ விசேஷங்களிலும் நித்யமாயிருக்கும். நித்யருடையவும், முக்தருடையவும் ஈச்வரனுடையவும் அநித்யேச்சையாலே வந்த விக்ரஹாதிகளில் அநித்யமாயிருக்கும். இதின் ப்ரவ்ருத்திபேதம் இவர்களுடைய இச்சைக்கீடான பரிணாமாதிகளாலே சேஷிக்கு போகோபகரணமாயும் சேஷபூதனுக்குக் கைங்கர்யோபகரணமாயும் நிற்கை.

சுத்தஸத்வத்தின் ஸ்வரூபம் என்பது ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றுடன் கலவாத ஸத்வத்தின் இருப்பிடமாகத் திகழ்வதே ஆகும். இந்த சுத்தஸத்வமானது ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள மண்டபம் மற்றும் கோபுரங்களாக இருத்தல், ஈச்வரனின் விக்ரஹமாக இருத்தல், நித்யர்களின் சரீரமாக இருத்தல் என்னும் தன்மைகளில் நித்யமாக உள்ளது. ஆனால் ஈச்வரன், நித்யர், முக்தர் ஆகியவர்களின் தற்காலிக விருப்பத்தின் அடிப்படையில் உண்டாகும் விக்ரஹம் போன்றவற்றில் நித்யமாக இருப்பதில்லை.இதன் செயல்பாடுகள் என்பது ஈச்வரன், நித்யர், முக்தர் ஆகியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபாடுகள் அடைவதே ஆகும். இத்தகைய மாறுபாடுகள் மூலம் சுத்தஸத்வமானது எஜமானனாகிய ஈச்வரனுக்கு அனுபவிக்கக்கூடிய பொருளாகவும், அடிமையாகிய ஜீவனுக்கு அவன் கைங்கர்யம் செய்யப் பயன்படும் பொருளாகவும் உள்ளது.