Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 30)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

மூன்று குணங்களின் செயல்பாடு பேதங்கள்

மூலம் - த்ரிகுணத்ரயத்துக்குப் ப்ரவ்ருத்தி பேதம் பத்தசேதநருடைய போகாபவர்கங்களுக்கும் ஈச்வரனுடைய லீலாரஸத்துக்குமாக ஸமமாகவும் விஷமமாகவும் பரிணாம ஸந்ததியையுடைத்தாய், தேஹேந்த்ரியாதி ரூபத்தாலே அவ்வோ வ்யாபாரங்களையும் பண்ணுகை. இது ரஜஸ் தமஸ்ஸுக்களையிட்டுப் பத்தர்க்குத் தத்த்வங்களிலுண்மையை மறைத்து விபரீத ஜ்ஞாநத்தை உண்டாக்குகிறது போகார்த்தமாக. இதுதானே அபவர்க்கார்த்தமாக ஸத்த்வ விவ்ருத்தியாலே தத்த்வங்களை யதாவத் ப்ரகாசிப்பிக்கிறது. இவையெல்லாமீச்வரனுக்கு லீலாரஸாவஹமாயிருக்கும்.

ப்ரக்ருதியின் செயல்பாடு என்பது ப்ரளயத்தின்போது மூன்று குணங்களைச் சரிசமமாக வைத்தபடி தான் மாறுவதும், ஸ்ருஷ்டியின்போது அவற்றுள் பேதங்கள் ஏற்படுத்தி தான் மாறுவதும், இவற்றை ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுள்ள ஜீவன் அனுபவிக்கும் வகையில் செய்வதும், அந்த ஜீவன்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடவும், எம்பெருமானின் லீலைக்காக இவ்விதம் செய்வதும் ஆகும். இதற்கு ஏற்ற வகையில் பெயர் மற்றும் உருவம் எடுக்கிறது. அந்தந்த உடல் தொடர்பு காரணமாக இவை ரஜோ மற்றும் தாமஸங்களால் உண்மையான தத்வங்களை மறைத்து, தவறான ஞானம் உண்டாக்கிவிடுகிறது. இவ்விதம் ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவனுக்கு ஸத்த்வ குணம் மேலோங்கும்போது, உண்மையான ஞானம் ஏற்பட்டு, மோக்ஷத்தைப் பெற அவன் செய்யும் முயற்சியில் உதவுகிறது. இவை அனைத்தும் எம்பெருமானின் லீலையாகவே உள்ளன.