Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 29)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
இருபத்து நான்கு தத்வங்களும் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள்
மூலம் - இருபத்துநாலு தத்வங்களுக்கும் அந்யோந்ய ஸ்வரூபபேதமும் அவ்வோ லக்ஷணங்களாலே ஸித்தம். இவற்றில் கார்யமான இருபத்திமூன்று தத்வங்களுக்கும் இவற்றால் ஆரப்தங்களானவற்றுக்கும் ஸ்திதியில் வரும் ஏற்றச் சுருக்கங்கள் புராணங்களிலே ப்ரஸித்தமானபடியே கண்டு கொள்வது. “ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத் விலக்ஷணாம்”, “தமஸ: பரமோ தாதா”, “அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம்” இத்யாதிகளாலே தமஸ்ஸுக்கு மேலான தேசவிசேஷம் ஸித்திக்கையாலே, “அநந்தஸ்ய ந தஸ்யாந்த: ஸங்க்யானம் வா அபி வித்யதே | ததநந்தம் அஸங்க்யாத ப்ரமாணம் சாபி வை யத:” இத்யாதிகள் நித்யவிபூதியில் அவச்சிந்நமல்லாத ப்ரதேசத்தாலே மூலப்ரக்ருதிக்கு ஆனந்த்யம் சொல்லுகின்றன.
இந்த இருபத்துநான்கு தத்துவங்களின் ஸ்வரூபம் பற்றி அவைகளின் இலக்கணம் மூலமாக அறியலாம். இவற்றில் இருபத்துமூன்று தத்துவங்கள் ப்ரக்ருதியின் மாறுதல்களால் வெளிப்படுகின்றன (இவை ப்ரக்ருதியின் கார்யங்கள்). மேலும் இவை ஒவ்வொன்றும் உண்டாக்கவல்ல மாறுபாடுகள் வெவ்வேறானவை, இவைகளின் விளைவுகளும் வெவ்வேறானவை என்பதை பல புராணங்கள் மூலம் அறியலாம். தமஸ்ஸுக்கு அப்பால் சுத்தஸத்வம் உள்ளதைக் கீழே உள்ள வரிகள் கூறுகின்றன: பௌஷ்கர ஸம்ஹிதை (25-42) - ஸ்வஸத்தா பாஸகம் ஸத்த்வம் குணஸத்த்வாத் விலக்ஷணாம் - சுத்தஸத்வம் என்பது தானாகவே வெளிப்படுவதாகும். இந்த சுத்தஸத்வம் என்பது ரஜோ, தமஸ் ஆகியவற்றுடன் உள்ள ஸத்வம் என்பதைக் காட்டிலும் வேறுபட்டது ; யுத்தகாண்டம் (114-15) – தமஸ: பரமோ தாதா - தமஸ்ஸுக்கும் அப்பால் உள்ளவன் பரமாத்மா; ஜிதந்தே ஸ்தோத்ரம் (2-21) - அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யம் - ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானதும், நித்யஸூரிகளால் போற்றப்படுவதும் ஆகிய நித்யவிபூதி – என்பது காண்க. ஆகவே ஸ்ரீவிஷ்ணுபுராணம் - அநந்தஸ்ய ந தஸ்யாந்த: ஸங்க்யானம் வா அபி வித்யதே தத் அநந்தம் அஸங்க்யாத ப்ரமாணம் ச அபி வை யத: - அந்தப் ப்ரக்ருதிக்கு அழிவில்லை, கால அளவு இல்லை, அளவிட இயலாத ஒன்றாகும் - என்று கூறும் வரியின் மூலம், நித்யவிபூதிக்கு உட்படாத ப்ரக்ருதியின் முடிவின்மை மட்டுமே கூறப்பட்டது என்று அறியவேண்டும்.