Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 28)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

இருபத்து நான்கு தத்வங்களும் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள்

மூலம் - இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ர பூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை புருடன் மணிவரம் ஆக பொன்றா மூல பிரகிருதி மறுவாக மான் தண்டாகத் தெருள் மருள் வாள்மறைவாக ஆங்காரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரி ஆக இருடிகங்கள் ஈர் ஐந்தும் சரங்களாக இருபூதமாலை வனமாலையாகக் கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே என்கிற கட்டளையிலே அறிகை உசிதம்.

இந்த இருபத்திநான்கு தத்வங்களும் ஸர்வேச்வரனுடைய ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளதைக் கீழே உள்ள ச்லோகம் மூலம் அறியலாம். (ச்லோகத்தின் பொருள்) - கருடனைச் சரீரமாகக் கொண்ட வேதத்தின் பொருளாக கண்ணன் உள்ளான். அவனுடைய திருமார்பில் உள்ள, இரத்தினங்களில் மிகவும் உயர்ந்ததான கௌஸ்துப மணியாக ஜீவன் உள்ளான். அவனது திருமார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவாக, நாசம் அடையாத ப்ரக்ருதி உள்ளது. அவனது கதையாக மஹத் உள்ளது. ஞானம் என்பது அவனது வாளாகவும், அஜ்ஞானம் என்பது அந்த வாளின் உறையாகவும் உள்ளன. அஹங்காரங்கள் சார்ங்கம் என்னும் வில்லாகவும், சங்காகவும் உள்ளன. மனம் என்பது சக்கரமாக உள்ளது. பத்து இந்த்ரியங்கள் வில்லின் பாணங்களாக உள்ளன. தந்மாத்திரைகள் ஐந்தும், பஞ்ச பூதங்களும் மாலையாக உள்ளன. இப்படியாக ஹஸ்திகிரி மீது நிற்கும் கண்ணன் அனைத்தையும் காக்கிறான்.