Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 27)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

த்ரிகுண த்ரவ்யங்கள்

மூலம் - இவற்றில் த்ரிகுண த்ரவ்யத்துக்கு ஸ்வரூபபேதம் குண த்ரயாச்ரயத்வம். ஸதத பரிணாமசீலமான இத்த்ரவ்யத்துக்கு ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் அந்யோந்யம் ஸமமானபோது மஹாப்ரளயம். விஷமமானபோது ஸ்ருஷ்டி ஸ்திதிகள். குணவைஷம்யமுள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள். இதில் விக்ருதமல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட ப்ரக்ருதி மஹதஹங்கார தந்மாத்ர பூதேந்த்ரியங்களென்று இருபத்து நாலு தத்த்வங்களாகச் சாஸ்த்ரங்கள் வகுத்துச் சொல்லும். சில விவக்ஷாவிசேஷங்களாலே ஓரோரிடங்களில் அவாந்தர வகுப்புக்களும் அவற்றின் அபிமானி தேவதைகளும் அவ்வோ உபாஸநா திகாரிகளுக்கு அறியவேணும். ஆத்மாவுக்கு அவற்றிற்காட்டில் வ்யாவ்ருத்தியறிகை இங்கு நமக்கு ப்ரதானம்.

மூன்று அசேதனங்களில் ப்ரக்ருதியின் ஸ்வரூபம் (இயல்பான தன்மை) என்பது மூன்று குணங்களுடன் (தன்மைகளுடன்) உள்ளதே ஆகும். இந்தப் ப்ரக்ருதி என்பது எப்போதும் மாறியபடியே இருப்பதாகும். ப்ரக்ருதியில் உள்ள ஸத்வ, ரஜோ மற்றும் தாமஸ குணங்கள் சரிசமமாக உள்ளபோது, மஹாப்ரளயம் உண்டாகிறது. இவை வேறுபடும்போது ஸ்ருஷ்டி ஏற்படுகிறது. இந்தக் குணங்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும்போது, ப்ரக்ருதியானது மஹத் முதலானவைகளாக மாறுகிறது. மாறுபடாமல் உள்ள ப்ரக்ருதியின் பகுதி, மாறுபடும் ப்ரக்ருதியின் பகுதி என்பதை சாஸ்த்ரங்கள் இருபத்துநான்கு தத்துவங்களாகப் பிரித்துக் கூறுகின்றன. அவையாவன - ப்ரக்ருதி, மஹத், அஹுங்காரம், ஐந்து தந்மாத்திரைகள், ஐந்து பூதங்கள், பதினொன்று இந்த்ரியங்கள் - ஆகும். இப்படியாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைப் பற்றியும், அந்தந்த பிரிவுக்கு அதிபதியான தேவதை பற்றியும் இவற்றை த்யானம் செய்யும் தகுதி பெற்றவர்கள் அறியவேண்டும். இவை அனைத்தும் ஆத்மாவைக் காட்டிலும் வேறானவை என்பதும், அந்த வேறுபாடு என்ன என்பதும் நாம் முக்கியமாக அறியவேண்டியதாகும்.