Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 26)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

மூலம் - இவ்வளவு அவஸ்தாந்தராபத்தி விகாரி த்ரவ்யத்துக்கு விருத்தமன்று. ஆகையாலே ப்ரமாண ப்ரதிபந்நார்த்தத்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழியில்லை. இங்ஙனன்றிக்கே உபசாரத்தாலே நிர்வஹிக்கப்பார்க்கில் ஆத்ம ஸ்வரூபத்திலும் ஞானாதி சப்தங்களை அந்யபரங்களாக்கலாம். ஸ்வயம்ப்ரகாசத்துக்கு ரூப ரஸாதி குணங்களுக்கும் அவையடியாக வந்த ப்ருதிவ்யாதி விபாகமும் பரிணாமாதிகளும் கூடுமோவென்கிற சோத்யமும் தர்மபூதஞானத்துக்கும் தர்மிஞானத்துக்குமுண்டான வைஷம்யங்களை ப்ரதிபந்தியாகக் கொண்டு ப்ரமாணபலத்தாலே பரிஹ்ருதம். இப்படி ஸ்வயம்ப்ரகாசமான சுத்தஸத்வத்ரயத்தை ஞாத்ருத்வமில்லாமையாலே த்ரிவிதாசேதனங்களென்று சேரக்கோத்தது. இவ்வசேதநங்கள் மூன்றுக்கும் ப்ரவ்ருத்தியாவது ஈச்வர ஸங்கல்பாநுரூபங்களான விசித்ர பரிணாமாதிகள்.

தொடர்ந்து மாற்றம் அடைந்தபடி உள்ள பொருள்கள் ஒரு சில நேரங்களில் ஒருவரால் ஏற்கவும்படலாம், நிராகரிக்கவும்படலாம், மற்றவர்களும் அந்தப் பொருள் குறித்து இதே போன்று இருக்க வாய்ப்புண்டு. இதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ப்ரமாணங்களால் தெளிவாக நிரூபிக்கப்பட்ட பொருள்களுக்கு உதாரணம் மூலம் முரண்பாடு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஒரு சிலர், “சுத்தஸத்வமானது தானாகவே வெளிப்படும் என்பது உபசாரமாக (உதாரணமாக சிங்கம் போன்ற மாணவன் என்றால் அது அந்த மாணவனைப் புகழ்வதற்கான உபசாரமாகும். உண்மையில் அவன் சிங்கம் அல்லன்) மட்டுமே கூறப்படுகிறது, உண்மையில் அவ்விதம் இல்லை”, என்று கூறலாம். இப்படிக்கொண்டால், “ஆத்மாவும் ஞானமயமானது அல்ல, ஆனந்தமயமானது அல்ல”, என்றும் கூறலாமே. இது பெருத்த முரண்பாடாகிவிடும் அல்லவோ? இவர்கள், “தானாகவே வெளிப்படும் ஒரு பொருளுக்கு எவ்விதம் ரூபம், சுவை, குணங்கள் முதலானவை அமையும்? தானாகவே வெளிப்படும் ஆத்மா, தர்மபூதஞானம் போன்றவற்றுக்கு இது போன்று சுவை, ரூபம் முதலானவை இல்லை அல்லவோ?”, என்று கேட்கலாம். இதற்கு விடை அளிப்போம். தானாகவே வெளிப்படும் பொருள்களில் அடிப்படையான பேதங்கள் உள்ளதால் இவ்விதம் ஒத்துக் கூற இயலாது. ஆகவே இது போன்ற இடங்களில் சாஸ்த்ரங்களையே ப்ரமாணங்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். தானாகவே வெளிப்படும் சுத்தஸத்வம் என்பது சேதனம் மற்றும் அறிபவன் ஆகிய இரண்டின் தன்மைகளும் இன்றி இருப்பதால், இது மூன்று விதமான அசேதனத்தில் சேர்க்கப்பட்டது. இந்த மூன்று வகையான அசேதங்களின் செயல்பாடு (ப்ரவ்ருத்தி) என்பது ஈச்வரனின் ஸங்கல்பத்தின் காரணமாக தொடர்ந்து மாறியபடி இருத்தலே ஆகும் (பரிணாமம்).