Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 24)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ப்ரக்ருதி, காலம், சுத்தஸத்வம்
மூலம் - “யோ வேத்தி யுகபத்ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: | தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரசக்ஷ்மஹே” என்கிறபடியே தர்மபூதஞானத்தாலே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கிற ஈச்வரனுக்கு சுத்தஸத்வ த்ரயம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறபடி எங்ஙனேயென்னில், இவனுடைய தர்மபூதஞானம் திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கிறாப்போலே இதுவும் ஸ்வயம் ப்ரகாசமாயிருக்கலாம். இப்படி நித்யருக்கும் துல்யம். விஷயப்ரகாச காலத்திலே தர்மபூதஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமானாற்போலே முக்தருக்கும் அவ்வவஸ்தையிலே இதுவும் ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை. தர்மபூதஞானத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியானது விஷயப்ரகாசமில்லாத காலத்தில் கர்மவிசேஷங்களாலே ப்ரதிபத்தையானாற்போலே சுத்தஸத்வத்தினுடைய ஸ்வாத்ம ப்ரகாசன சக்தியும் பத்ததசையில் ப்ரதிபத்தையாகையாலே சுத்தஸத்வம் பத்தருக்கு ப்ரகாசியாதொழிகிறது.
ந்யாய தத்வத்தின் மங்கள ச்லோகம், “யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்த்ரம் ந்யாயதத்வம் ப்ரசக்ஷ்மஹே - எந்த ஒரு ஸர்வேச்வரன் அனைத்தையும் ஒரே நேரத்தில் தனது ஸ்வபாவம் காரணமாக அறிகிறானோ, அப்படிப்பட்ட ஹரியை வணங்கிவிட்டு ந்யாயதத்வம் என்ற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம்”, என்றது. இங்கு ஒரு கேள்வி எழலாம். சுத்தஸத்வமானது ஸர்வேச்வரனின் தர்மபூதஞானத்தாலேயே அவனுக்குப் புலப்படுகிறது, இப்படி உள்ளபோது அவனுக்கு சுத்தஸத்வம் தானாகவே புலப்படுவதாகக் கூறுவது எப்படி? விடை அளிப்போம் - ஸர்வேச்வரனின் தர்மபூதஞானம் என்பது அவனது திவ்யமான ஸ்வரூபம் உட்பட அனைத்தையும் புலப்பட வைக்கிறது என்று கூறினோம், ஆயினும் அவனது ஸ்வரூபம் தானாகவே வெளிப்படவல்லது என்று கூறவில்லையா? இதுபோன்று அவனுக்கு சுத்தஸத்வமும் தர்மபூதஞானம் வழியே வெளிப்பட்டாலும், தானாகவே வெளிப்படுவதாகவே கொள்ளவேண்டும். இது நித்யசூரிகளுக்கும் பொருந்தும். ஒரு பொருளை உணர்த்தவல்ல காலத்தில், அந்த ஆத்மாவிற்கு தர்மபூதஞானம் தானாகவே தன்னை வெளிப்படுத்துவது போன்று (அந்தப் பொருள் உணரப்படுவதே தர்மபூதஞானம் தன்னை வெளிப்படுத்துவதால்தான்), முக்தி அடைந்தவர்களுக்கு சுத்தஸத்வமானது தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் கர்மம் காரணமாக, ஒரு பொருளை உணர்த்தவேண்டிய நேரத்தில்கூட தர்மபூதஞானம் தடைபட்டு, தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இயலாமல் போகலாம். இது போன்றே ஸம்ஸார பந்தத்தில் உள்ளதால், சுத்தஸத்வம் என்பது தன்னைத் தானாகவே வெளிப்படுத்த இயலாமல் போகிறது.