Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 23)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ப்ரக்ருதி, காலம், சுத்தஸத்வம்
மூலம் - இப்படி ஸ்வயம்ப்ரகாசமாகில் ஸம்ஸாரிகளுக்கு சாஸ்த்ரவேத்யமாக வேண்டாதே தானே தோன்ற வேண்டாவோவென்னில் ஸர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்மபூதஞானமும் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்க ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம்ப்ரகாசமாய் வேறெல்லார்க்கும் ஞானாந்தர வேத்யமானாற் போலவும், தர்மபூதஞானம் ஸ்வாச்ரயத்துக்கே ஸ்வயம்ப்ரகாசமாய் இதரருக்கு ஸ்வயம்ப்ரகாசம் அல்லாதாப்போலவும் இதுவும் நியதவிஷயமாக ஸ்வயம்ப்ரகாசமானால் விரோதமில்லை.
இவ்விதம் (சுத்தஸத்வம்) தானாகவே வெளiப்படும் திறன் உள்ளது என்றால், சாஸ்த்ரங்கள் மூலம் அறியப்படவேண்டிய அவசியம் இல்லாதது என்றால், அது ஏன் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்குப் புலப்படாமல் உள்ளது? இதற்கான விடை கூறுவோம். ஆத்மாவின் ஸ்வரூபமான ஞானமும், அதன் தர்மபூதஞானமும் தானாகவே வெளிப்படக்கூடியவை ஆகும். இதில் ஆத்மாவின் ஸ்வரூபம் என்பது அந்த ஆத்மாவிற்கு மட்டுமே வெளிப்படும், மற்றவர்களுக்கு அவரவர்களின் தர்மபூதஞானம் வழியாகவே மற்ற ஆத்மாவின் ஸ்வரூபம் புலப்படும். ஆனால் தர்மபூதஞானம் என்பது அந்த ஆத்மாவிற்கு மட்டுமே புலப்படும், மற்றவர்களுக்கு அல்ல. இது போன்று சுத்தஸத்வம் என்பது ஈச்வரன், நித்யர், முக்தர் ஆகியோருக்கு மட்டுமே தானாகவே வெளிப்படும், மற்றவர்களுக்கு அல்ல. ஆக இந்தக் கருத்துக்களில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.