Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தர்மபூத ஞானம்
மூலம் – ஜீவேச்வரரூபரான ஆத்மாக்களெல்லாருடையவும் ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசம். இத்தர்மி ஸ்வரூப ப்ரகாசத்துக்குப் பத்தருக்குமுள்பட ஒரு காலத்திலும் ஸங்கோச விகாஸங்களில்லை. ஸர்வாத்மாக்களுடையவும் தர்மபூதஞானம் விஷய ப்ரகாசன வேளையிலே ஸ்வாச்ரயத்துக்கு ஸ்வயம்ப்ரகாசமாயிருக்கும். ஞானத்வமும் ஸ்வயம்ப்ரகாசத்வமும் தர்மதர்மிகளுக்கு ஸாதாரணம். தர்மபூதஞானத்துக்கு விஷயித்வமேற்றம். தர்மியான ஆத்மஸ்வரூபத்துக்குப் ப்ரத்யக்த்வம் ஏற்றம். ஞானத்வமாவது கஸ்யசித் ப்ரகாசகத்வம், அதாவது தன்னுடையவாகவுமாம் வேறொன்றினுடையவாகவுமாம் ஏதேனுமொன்றினுடைய வ்யவஹாராநுகுண்யத்தைப் பண்ணுகை. ஸ்வயம் ப்ரகாசத்வமாவது தன்னை விஷயீகரிப்பதொரு ஞானாந்தரத்தால் அபேக்ஷையறத்தானே ப்ரகாசிக்கை. தர்மபூதஞானத்துக்கு விஷயித்வமாவது தன்னையொழிந்ததொன்றைக் காட்டுகை. ஆத்மாக்களுக்குப் ப்ரத்யக்த்வமாவது ஸ்வஸ்மை பாஸமாநத்வம், அதாவது தன் ப்ரகாசத்துக்குத்தான் பலியாயிருக்கை என்றபடி. ஏதேனுமொரு வஸ்துவின் ப்ரகாசத்துக்குப் பலியென்கிற ஸாமாந்யாகாரத்தைத் தன் ப்ரகாசத்துக்குத் தான் பலியென்று விசேஷித்தவாறே ப்ரத்யக்த்வமாம். இவ்விசேஷமில்லாத வஸ்துவுக்கு இஸ்ஸாமாந்யமும் இத்தோடு வ்யாப்தமான சேதநத்வமுமில்லை. இத்தர்ம தர்மிகளிரண்டும் ஸ்வயம்ப்ரகாசமாயிருந்தாலும் நித்யத்வாதி தர்மவிசேஷ விசிஷ்ட ரூபங்களாலே ஞானாந்தர வேத்யங்களுமாம். தன்னுடைய தர்மபூதஞானம் தனக்கு ஞானாந்தர வேத்யமாம்போது ப்ரஸரண பேதமாத்ரத்தாலே ஞானாந்தர வ்யபதேசம்.
ஜீவன், ஈச்வரன் போன்ற ஆத்மாக்கள் அனைத்தும் இயல்பாகவே தங்களுக்குத் தாங்கள் ப்ரகாசமானவை ஆகும். இவ்விதம் தங்களுக்குத் தாங்களே ப்ரகாசமாக உள்ள நிலை என்பது, ஸம்ஸாரிகள் உட்பட யாருக்கும், எக்காலத்திலும் சுருங்குவதோ விரிவதோ இல்லை. ஒரு பொருளைக் காண்பிக்கும்போது தர்மபூதஞானம் என்பது தனது ஆத்மாவிற்குப் ப்ரகாசமாகவே உள்ளது. ஆக ஆத்மாவிற்கு இயற்கையாகவே உள்ள ஞானம் (ஸ்வரூப ஞானம்) மற்றும் தர்மபூதஞானம் ஆகிய இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே மற்ற எதனின் உதவியும் இன்றி ப்ரகாசிக்கக்கூடியவை ஆகும். தர்மபூதஞானத்தின் சிறப்பு என்னவென்றால், பொருள்களை உணர்த்துவது (விஷயித்வம்) ஆகும். ஸ்வரூப ஞானத்தின் சிறப்பு என்னவென்றால் தன்னைத்தானே உணர்த்துவது (ப்ரத்யக்த்வம்) ஆகும். இரண்டிற்கும் பொதுவாக உள்ள ஞானம் என்பது ஒன்றை உணர்த்துவது என்பதாகும். அதாவது, ஞானம் என்பது தன்னைப் பற்றியோ, அல்லது மற்ற ஒன்றைப் பற்றியோ உணர்த்துகிறது, தன் மீதோ அல்லது மற்றவற்றின் மீதோ செயலாற்றவும் வைக்கிறது. ஸ்வயம்ப்ரகாசம் என்றால் தன்னை விளக்க, மற்ற ஏதோ ஒரு ஞானம் அவசியம் இல்லாமல், தானாகவே தன்னை விளங்கவைப்பதாகும். தர்மபூதஞானத்தின் தன்மை என்பது தன்னை அல்லாமல் மற்றொரு பொருளை உணர்த்துவது ஆகும். ஆத்மாக்களின் ஸ்வரூப ஞானம் என்பதின் தன்மை தன்னையே உணர்த்துவது ஆகும். எந்த ஒரு பொருளைப் பற்றி உணர்த்தப்பட்டாலும், அந்த ஞானத்தால் பலனடைவது ஆத்மாவே ஆகும்; இந்தக் கருத்து பொதுப்படையான ஒன்றாகும்; இந்த வரியில் உள்ள “எந்த ஒரு பொருளைப் பற்றி உணர்த்தப்பட்டாலும்” என்பதில் உள்ள “பொருள்” என்னும் பொதுவான பதத்தை, “ஆத்மா” என்று குறிப்பிட்டுக் கூறினால், தன்னைப் பற்றியே ஆத்மா அறிந்துகொண்டு, அதனால் தானே பலனடைவதாக ஆகிறது அல்லவா? இதுவே ப்ரத்யக்த்வம் என்பதாகும். இது போன்று ப்ரத்யக்த்வம் இல்லாத பொருள் ஏதேனும் உள்ளது என்றால், அந்தப் பொருளுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் இல்லை, அப்படிப்பட்ட பொருள் சேதனம் என்று கூற இயலாததாகும். தர்மபூதஞானமும், அந்த ஞானம் உள்ள ஆத்மாவும் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் உள்ளவையாகிலும், சாஸ்த்ரம் மூலமும் இவற்றை வெளிப்படுத்த இயலும். இவ்விதம் சாஸ்த்ரம் மூலமாக நித்யத்தன்மை முதலானவற்றை விளக்க இயலும். ஆக இவ்விதம் தானே வெளிப்படக்கூடிய தர்மபூதஞானமும், மற்ற ஒரு ஞானம் மூலம் விளக்கப்படலாம், அந்த ஞானம் என்பது தர்மபூதஞானத்தின் ஒரு பகுதியே ஆகும்.