Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 19)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தர்மபூத ஞானம்

மூலம் - இக்கர்மபலம் அனுபவிக்கைக்குப் பத்தருக்கு ஸ்வரூப யோக்யதையும், ஸஹகாரி யோக்யதையுமுண்டு. ஸ்வரூப யோக்யதை பரதந்த்ர சேதநத்வம். ஸஹகாரி யோக்யதை ஸாபராதத்வம். நித்யருக்கும் முக்தருக்கும் பரதந்த்ர சேதநதையாலே ஸ்வரூப யோக்யதையுண்டேயாகிலும், ஈச்வராநபிமத விபரீதானுஷ்டானமில்லாமையாலே ஸஹகாரி யோக்யதை இல்லை. ஈச்வரன் ஸர்வம் ப்ரசாஸிதவாய்த் தானொருத்தருக்கு சாஸநீயனன்றிக்கே நிற்கையாலே, பரதந்த்ர சேதநத்வமாகிற ஸ்வரூப யோக்யதை யுமில்லை, ஸ்வதந்த்ராஜ்ஞாதி லங்கனமாகிற ஸஹகாரி யோக்யதையுமில்லை.

ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்கு இக்கர்ம பலன்களை அனுபவித்தல் என்பது இயற்கையிலேயும், தங்களுடனேயே உள்ள வேறு சில காரணங்களாலும் ஆகும். அவர்கள் மற்றவருக்கு (ஈச்வரனுக்கு) அடங்கியவர்கள் என்பதால், இவ்விதம் கர்மபலனை அனுபவித்தல் இயற்கையாகிறது. வேறு சில காரணங்கள் எவை என்றால் ஈச்வரனுக்கு எதிரான சில பாவச்செயல்களைச் செய்வது ஆகும். நித்யர்களும், முக்தர்களும் ஈச்வரனுக்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கும் இயற்கையாகவே கர்மபலன் அனுபவித்தல் என்பது உண்டு. ஆனால் அவர்கள் ஈச்வரனின் விதிகளை மீறாமல் உள்ளதால், வேறு காரணங்களால் கர்மபலன் அனுபவித்தல் என்ற நிலை அவர்களுக்கு உண்டாகாது. ஈச்வரன் அனைத்தையும் நியமிப்பவனாகவும், யாருக்கும் கட்டுப்பட்டு இல்லாதவனாகவும் இருப்பதால் இப்படிப்பட்ட கர்மபலனை அனுபவித்தல் என்பது அவனுக்கு இயற்கையாகவே கிடையாது. அவனுக்கு இப்படித்தான் நடக்கவேண்டும் என்ற விதிகளை விதிக்க யாரும் இல்லாததால், மற்ற காரணங்களால் கர்மபலன் அனுபவித்தல் என்பதும் இல்லை.