Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 18)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தர்மபூத ஞானம்

மூலம் - ஈச்வரவிபூதியான ஸர்வவஸ்துவுக்கும் ஆநுகூல்யம் ஸ்வபாவமாய் இப்படி ஈச்வரனும் நித்யரும் முக்தரும் அனுபவியாநிற்க, ஸம்ஸாரிகளுக்குக் காலபேதத்தாலும் புருஷ பேதத்தாலும் தேசபேதத்தாலும் அல்பானுகூலமாயும் ப்ரதிகூலமாயும் உதாஸீநமா யுமிருக்கிற இவ்விபாகங்களெல்லாம் இவ்வஸ்துக்களுக்கு ஸ்வபாவஸித்தங்களல்ல. இது இவர்களுடைய கர்மங்களுக்கீடாக ஸத்ய ஸங்கல்பனான ஈச்வரன் இவர்களுக்கு பலப்ரதானம் பண்ணின ப்ரகாரம்.

ஈச்வரனின் விபூதியாக உள்ள அனைத்துப் பொருள்களுமே, அவற்றின் இயல்பாகவே அனைவராலும் ஏற்கப்படும் தன்மையுடனேயே உள்ளன. இவை ஈச்வரனாலும், நித்யஸூரிகளாலும், முக்தர்களாலும் ஏற்கும்படியாகவே உள்ளன. ஆனால் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்கு இந்தப் பொருள்கள் ஒரு சில நேரங்களில், ஒரு சில இடங்களில், ஒரு சிலருக்கு ஏற்கும்படியாகவும், வேறு சில நேரம், இடம், மனிதர்களுக்கு ஏற்காதபடியாகவும் உள்ளன. ஆனால் இந்த முரண்பாடு நிறைந்த தன்மைகள், அந்தப் பொருள்களுக்கு இயற்கையாக இருப்பதில்லை. இவ்விதம் ஒரே பொருள் பலருக்குப் பலவிதமாக உள்ளது என்ற நிலை, அவரவர்களின் கர்மம் காரணமாக, ஸர்வேச்வரனின் மாற்ற இயலாத ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றன.