Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் ஏற்படும் கைங்கர்யம்
மூலம் - அநந்த கருடாதிகளுக்கு அதிகார விசேஷங்களும் ததுசித கைங்கர்யங்களும் வ்யவஸ்திதங்களாயிருக்க, நித்யருக்கும் முக்தருக்கும் ஸர்வவித கைங்கர்ய ஸித்தியுண்டென்கிற அர்த்தம் கூடுமோவென்னில் - ஸ்வாமியினுடைய அபிப்ராயத்துக்கு ஈடாக தனக்கு அபிமதங்களான கைங்கர்யங்களிலே கிடையாதவை ஒன்றுமில்லாமையாலும், ஓரொருத்தருக்கு வ்யவஸ்திதங்களான கைங்கர்யங்களைத் தாங்கள் அனுஷ்டிக்க வேணுமின்கிற அபிஸந்தி வேறொருத்தருக்குப் பிறவாமையாலும், ஆரேனுமொருவர் அனுஷ்டிக்கும் கைங்கர்யமும் ஸ்வாமிக்குப் ப்ரியமானபடியாலே ததுசித் கைங்கர்யங்களும் ஸர்வருக்கும் ப்ரியமாய் கைங்கர்ய பலமான ப்ரீதியில் வாசியில்லாமையாலும் ஸர்வருக்கும் ஸர்வவித கைங்கர்ய ஸித்தி உண்டென்கையில் விரோதமில்லை.
ஆதிசேஷன், கருடன் முதலான நித்யஸூரிகள் ஒரு சில குறிப்பட்ட பணிகளையும் கைங்கர்யங்களையும் செய்து வருகின்றனர் என்று சொல்வதுண்டு. அப்படியென்றால் எம்பெருமானார் கூறும் கருத்தான, “நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனைத்து விதமான கைங்கர்யமும் செய்து வருகின்றனர்”, என்பது முரணாகி விடுகிறதே எனலாம். இதற்கு விடை - அவர்கள் தங்களுக்கு விருப்பமான செயல்களைச் செய்ய எந்தத் தடையும் இல்லை, ஆனால் தங்களில் மற்றொருவர் செய்கின்ற அதே செயலைத் தாங்களும் செய்யவேண்டும் என்ற (போட்டி மனப்பான்மை) எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதே இங்கு கருத்து. மேலும் இவர்களில் யார் எந்தவிதமான கைங்கர்யம் செய்தாலும் எம்பெருமானுக்கு அதனால் உகப்பே உண்டாகும். ஆகவே யாரோ ஒருவர் ஏதேனும் ஒரு கைங்கர்யத்தைச் செய்வதால், அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல், அவர் செய்த கைங்கர்யம் கண்டு மகிழ்வே உண்டாகிறது. இவர்களுக்கு அதனால் உண்டாகும் மகிழ்வில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஆகவே அனைவருக்கும் அனைத்து கைங்கர்யமும் உண்டு என்று எம்பெருமானார் கூறுவதில் முரண்பாடு இல்லை.