Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
மூன்று வகையான சேதனர்களின் செயல்பாடுகளும் வேறுபாடுகளும்
மூலம் – நித்யருக்கு நீக்கியுள்ளாரில் பேதம், அநாத்யாவிர்பூத ஸ்வரூபராய்ப் பரதந்த்ரராயிருக்கை. இவர்களுக்கு நீக்கியுள்ளாரிற் காட்டில் ஸ்திதி பேதம், அநாத்யநுவ்ருத்தமான சேஷிதத்வாநுபவம். இது நித்யருக்கெல்லாம் பொதுவானபடியாலே, இவர்களுக்கு அந்யோந்யம் ஸ்திதியில் வைஷம்யமில்லை. இவர்களுக்குப் ப்ரவ்ருதி பேதம், அநாதி ப்ரவாஹ நித்யங்களான கைங்கர்ய விசேஷங்கள்.
நித்யஸூரிகளுக்கும் மற்ற ஜீவன்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், நித்யஸூரிகள் அநாதியாகவே (தொடக்கம் இன்றி) தங்களுடைய ஆத்ம ஸ்வரூபம் வெளிப்பட்டவர்களாக, பகவானுக்கு மட்டுமே வசப்பட்டவர்களாக இருத்தல் ஆகும். மற்றவர்களுடைய இருப்பு என்பதற்கும், இவர்களுடைய இருப்பு என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடானது, “இவர்களுடைய பகவத் அனுபவம் என்பது எல்லையற்ற காலமாக வளர்ந்தபடி உள்ளது”, என்பதாகும். ஆனால், இந்த நிலையானது அனைத்து நித்யஸூரிகளுக்கும் பொதுவானது என்பதால், இவர்கள் ஒவ்வொருக்கு இடையிலும், இருப்பு வேறுபாடு என்பது கிடையாது. இவர்களுடைய செயலில் உள்ள வேறுபாடு என்பது, எப்போதுமே வெள்ளம் போன்று பெருகுகின்ற கைங்கர்ய சிறப்பே ஆகும்.