Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

மூன்று வகையான சேதனர்களின் செயல்பாடுகளும் வேறுபாடுகளும்

மூலம் - முக்தருக்கு நீக்கியுள்ளாரில் பேதம் ப்ரதிபந்தக நிவ்ருத்தியாலே ஆவிர்பூத ஸ்வரூபராயிருக்கை. ஸ்திதி பேதம் பூர்வாவதியுண்டான ஆவிர்பாவத்துக்கு உத்தராவதியன்றிக்கேயிருக்கை. இவர்களுக்கு அந்யோந்யம் ஸ்திதி பேதம் ஆவிர்பாவத்தில் முற்பாடு பிற்பாடுகளால் உண்டான முன்புற்ற ஏற்றச் சுருக்கம். ப்ரவ்ருத்தி பேதம் அநாதிகாலம் இழந்து பெற்ற பரிபூர்ண பகவதனுபவ ஜநித ப்ரீதிகாதிதமான யதாபிமத கைங்கர்ய விசேஷங்கள்.

முக்தி பெற்ற ஜீவன்களுக்கும் மற்ற ஜீவன்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், முக்தி பெற்ற ஜீவன்கள் தங்களுடைய தடைகளைக் கடந்து, தங்களின் ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் ஆவர். இவர்களுடைய ஸ்திதி (நீடிப்பு) என்பது இவர்களுக்கு வெளிப்பட்ட ஸ்வரூபமானது முடிவில்லாமல் அப்படியே நிலைப்பது ஆகும். இவர்களுடைய ப்ரவ்ருத்தி (செயல்) என்பது எண்ணற்ற காலமாக இழந்திருந்த, பகவானின் மீது மிகவும் அன்புடன் உள்ள நிலை காரணமாக உண்டாகும் கைங்கர்யத்தை மீண்டும் பெறுதல் என்பதே ஆகும்.