Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
மூன்று வகையான சேதனர்களின் செயல்பாடுகளும் வேறுபாடுகளும்
மூலம் - பத்தசேதநருக்கு நீங்கியுள்ளாரில் பேதம், அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்த யுக்தராயிருக்கை. இவர்களுக்கு அந்யோந்யம் வரும் ஞான ஸுகாதி பேதத்தை ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான வகுப்புகளிலே கண்டு கொள்வது. இப்பத்த சேதநர் தந்தாமுக்குக் கர்மானுரூபமாக ஈச்வரன் அடைத்த சரீரங்களை தர்மி ஸ்வரூபத்தாலும் தரியா நிற்பார்கள், தர்மியால் வருகிற தாரணம் சரீரத்தினுடைய ஸத்தைக்குப் ப்ரயோஜனமாயிருக்கும் ஜாக்ரதாத்யவஸ்தையில் தர்மபூதஞானத்தாலே வருகிற சரீரதாரணம் புருஷார்த்த ததுபாயானுஷ்டானங்களுக்கும், க்ருதோபாயனான பரமைகாந்திக்கு பகவதனுபவ கைங்கர்யங்களுக்கும் உபயுக்தமாயிருக்கும். பாபக்ருத்துக்களுக்கு இச்சரீரதாரணம் விபரீத பலத்துக்கு ஹேதுவாயிருக்கும். இஜ்ஜீவர்கள் இச்சரீரத்தை விட்டால் இதின் ஸங்காதம் குலையுமித்தனை. சரீரத்துக்கு உபாதானமான த்ரவ்யங்கள் ஈச்வர சரீரமாய்க் கொண்டு கிடக்கும். பத்தசேதநருக்கு இதரரிற் காட்டில் ஸ்திதி பேதம் யாவந்மோக்ஷம் அனுவர்த்திக்கை. ப்ரவ்ருத்தி பேதம் புண்ய பாப அனுபயரூபங்களான த்ரிவித ப்ரவ்ருத்திகளும்.
ஸம்ஸார பந்தம் என்னும் பிடியில் சிக்கியுள்ள சேதனர்களுக்கும் மற்ற சேதனர்களுக்கும் (முக்தர், நித்யர்) உள்ள வேறுபாடு என்னவெனில் - பந்தத்தில் உள்ள சேதனர்கள் அறியாமை, கர்மங்கள், பூர்வ கர்ம வாஸனை, உலக விஷயங்களில் நாட்டம், ப்ரக்ருதியுடன் தொடர்பு என்பதைக் கொண்டுள்ளனர். ப்ரம்மன் தொடங்கி புல்பூண்டு வரை உள்ள ஜீவன்களில் ஞானம் மற்றும் சுக அனுபவங்கள் முதலானவற்றில் வேறுபாடுகளைக் காணலாம். தங்களுடைய கர்மம் காரணமாக ஈச்வரன் தங்களுக்கு அளித்த சரீரத்தை ஆதரித்தபடி இவ்வகை சேதனர்கள் உள்ளனர். தங்கள் சரீரங்களைத் தங்களது ஸ்வரூபம் மூலமாகவோ, தர்மபூதஞானம் மூலமாகவோ தாங்கியபடி உள்ளனர். ஸ்வரூபம் மூலம் தாங்கப்படுவதாலேயே சரீரம் வாழ்கிறது. விழித்திருக்கும் நிலையில் தர்மபூதஞானத்தின் காரணமாக இந்தச் சரீரமானது வாழ்வின் புருஷார்த்தங்களைத் தேட முயற்சி செய்தபடி உள்ளது. அத்தகைய புருஷார்த்தங்களைப் பெற உதவும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. மிகவும் உயர்ந்த பரமைகாந்திகளுக்கு தர்மபூதஞானம் வழியாக, இந்தச் சரீரம் பகவத் அனுபவத்திலும், பகவானின் கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தப்படுகிறது. பாபம் நிறைந்தவர்களுக்கு இந்தச் சரீரமானது மேலும் பாபம் செய்யக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஜீவன் இந்த உடலை விடும்போது, இது அழியத் தொடங்குகிறது. சரீரம் உண்டாக முக்கியமான காரணமாக உள்ள பஞ்சபூதங்கள் ஈச்வரனின் சரீரமாக நிலைத்து விடுகின்றன. மற்ற சேதனர்களைக் காட்டிலும், பத்தசேதனர்களின் நீடிப்பு (ஸ்திதி) என்பது, மோக்ஷம் அடையும்வரை, இந்தச் சரீரத்துடன் தொடர்பு கொண்டபடி இருப்பதாகும். இவர்களின் செயல்பாடு (ப்ரவ்ருத்தி) என்பது, “புண்யம், பாவம், இவை இரண்டும் அற்றது” என்று மூன்று வகையாகும்.