Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

ஜீவன் பரம்பொருளுக்கே இயல்பான அடிமையானவன்

மூலம் – இஜ்ஜீவ தத்த்வம் ஸர்வேச்வரனுக்குச் சேஷமாயேயிருக்குமென்றும், அவனுக்கே நிரூபாதிகசேஷமென்றும், அயோகாந்ய யோக வ்யவச்சேதங்களாலே ப்ரதம பதத்திலே தோன்றின சேஷத்வம் ஸம்பந்த ரூபமாகையாலே ஸம்பந்தி ஸ்வரூபம் நிரூபிதமானாலல்லது அறியவொண்ணாமையாலே, ஜீவனுக்கு இது நிரூபித ஸ்வரூப விசேஷணமென்னலாம். அணுத்வே ஸதி சேதநத்வம் போலே ஸ்வத: சேஷத்வே ஸதி சேதநத்வமும் ஜீவ லக்ஷணமாகவற்றாகையாலே, இச்சேஷத்வம் ஜீவனுக்கு ஸ்வரூப நிரூபகமென்னவுமாம். இப்படி விபுத்வேஸதி சேதநத்வமும், அநந்யாதீநத்வ நிரூபாதிக சேஷித்வாதிகளும் ஈச்வர லக்ஷணங்கள். ஜீவேச்வர ரூபமான ஆத்மவர்க்கத்துக்கெல்லாம் பொதுவான லக்ஷணம் சேதநத்வமும் ப்ரத்யக்த்வமும். சேதநத்வமாவது ஞானாச்ரயமாகை, ப்ரத்யக்த்வமாவது தனக்குத்தான் தோற்றுகை. அப்போது தர்மபூதஞான நிரபேக்ஷமாக “நான்” என்று தோற்றும். இப்படி சேதநத்வாதிகள் ஈச்வரனுக்கும் ஜீவனுக்கும் பொதுவாகையாலே அவனிற்காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக ஜீவலக்ஷணத்தில் ஸ்வதச்சேஷத்வாதிகள் சொல்லுகிறது. ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியில் தோற்றின தாதர்த்யத்துக்கு உபாதியில்லாமையாலே, ஸர்வரக்ஷகனான ஸ்ரீய:பதிக்கு ஜீவாத்மா நிரூபாதிக சேஷமாயே இருக்குமென்று இப்படி யாவத் ஸ்வரூபம் ஸம்பந்தம் சொல்லுகை, அயோக வ்யவச்சேதம் மத்யமாக்ஷரத்தில் அவதாரண ஸாமர்த்யத்தாலே அவனுக்கே நிரூபாதிக சேஷம், வேறொருத்தருக்கு நிரூபாதிகசேஷமென்கை அந்யயோக வ்யவச்சேதம். இச்சேஷத்வம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வளரும்படி மேலே சொல்லக் கடவோம்.

ஜீவன் என்னும் தத்த்வம் ஸர்வேச்வரனுக்கு எப்போதும் அடிமையாகவே உள்ளான், அவனுக்காகவே உள்ளான், எந்தப் ப்ரதிபலனையும் எதிர்பாராமல் அவனுக்கு அடிமையாக உள்ளான். இதன் மூலம் அவன் ஸர்வேச்வரனுக்காகவே எப்போதும் உள்ளான் (அயோக வ்யவச்சேதம்) என்பதும், மற்றவர்களுக்காக அல்லன் (அந்யயோக வ்யவச்சேதம்) என்பதும் உணர்த்தப்பட்டது. திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவத்தின் மூலம், ஜீவன் இவ்விதம் அவனுக்கு அடிமையாக உள்ளான் என்பது கூறப்பட்டது. இதன் மூலம், ஜீவனுக்கு ஸர்வேச்வரனுடன் உள்ள ஸம்பந்தம் கூறப்பட்டது. இப்படியிருக்கையில், இத்தகைய ஸம்பந்தம் இன்றி ஜீவனைப் பற்றி ஏதும் கூற இயலாது. அணு போன்று உள்ளதும், அறிவுடன் உள்ளதும் ஜீவனுடைய தன்மைகள் போன்று, அறிவுடன் உள்ளதும் ஈச்வரனுக்கு அடிமையாக உள்ளதும் ஜீவனின் தன்மைகள் ஆகும். ஆகவே அடிமையாக உள்ளவன் என்பதும் ஜீவனுக்கு ஓர் அடையாளமாக உள்ளது. இது போன்று ஈச்வரனுக்கு “அறிவுடன் உள்ளது, எங்கும் உள்ளது (விபுத்வம்)” ஆகியவை தன்மைகளாக உள்ளன. இது தவிர அவன் மற்ற எதனையும் சார்ந்து இல்லாமல் சுதந்திரமாக உள்ளான் என்பதும், மற்றவற்றிலிருந்து எதனையும் எதிர்பாராமல் உள்ளான் என்பதும் அறியப்படவேண்டும். ஜீவன் மற்றும் ஈச்வரன் முதலான ஆத்ம வஸ்துக்கள் அனைத்திற்கும், சேதநத்வம் மற்றும் ப்ரத்யக்த்வம் ஆகிய இரண்டும் பொருந்தும். சேதநத்வம் என்றால் ஞானத்துடன் உள்ள நிலையாகும். ப்ரத்யக்த்வம் என்றால் தன்னைப் பற்றிய அறிவுடன் உள்ள நிலையாகும். ஜீவனிடம் உள்ள ஞானமானது தர்மபூதஞானம் எனப்படும் (இதனைக் கொண்டே ஜீவன் அனைத்தையும் அறிகிறான்). ஆனால் தன்னைப் பற்றி, “இது நான்”, என்று அறிந்து கொள்ள தர்மபூதஞானம் அவசியமில்லை. இவ்விதம் ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் சேதநத்வம் மற்றும் ப்ரத்யக்த்வம் ஆகியவை பொதுவாக உள்ளதால், ஜீவனுக்கு உள்ள தன்மையை ஈச்வரத் தன்மைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஜீவன் இயல்பாகவே ஈச்வரனின் அடிமை எனப்படுகிறான். ஆகவே அஷ்டாக்ஷரத்தின் முதல் பதத்தில், “அ” என்னும் எழுத்து மூலம், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி, ஜீவன் ஈச்வரனின் அடிமையாக உள்ளான் எனப்பட்டது. ஆகவே பெரியபிராட்டியின் நாயகனான ஸ்ரீமந்நாராயணனுக்கு ஜீவன் முழுவதுமாக, எதனையும் எதிர்பாராத அடிமையாக உள்ளான் என்பது உணர்த்தப்பட்டது. இப்படியாக ஜீவன் உள்ளவரையில், அவனுக்கும் ஈச்வரனுக்கும் உள்ள உறவுமுறையை அயோக வ்யவச்சேதம் என்கிறோம். அஷ்டாக்ஷரத்தின் முதல் எழுத்தான “ஓம்” என்பதன் நடுவில் உள்ள “உ” என்னும் எழுத்தானது (ஓம் = அ, உ, ம), “மட்டும்” என்னும் பொருள் அளிக்கிறது; அதாவது, ஜீவன் ஈச்வரனுக்காக மட்டுமே உள்ளான் என்பதும், அவன் மற்றவர்களுக்காக உள்ளான் என்பது மறுக்கப்படவும் செய்கிறது. இந்த மறுப்பானது அந்யயோக வ்யவச்சேதம் எனப்படுகிறது. இத்தகைய சேஷத்வம் பகவான் தொடங்கி அடியார்கள்வரை நீடிப்பதை நாம் வேறு ஓர் இடத்தில் விளக்குவோம்.