Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
ஸ்வரூபம் - ஸ்திதி - ப்ரவ்ருத்தி என்பவற்றின் விளக்கங்கள்
மூலம் - ஸ்வரூபமென்றது ஸ்வாஸதாரணதர்மத்தாலே நிரூபிதமான தர்மியை. ஸ்திதியாவது இதனுடைய காலாந்தராநுவ்ருத்தி. இதுதான் நித்யவஸ்துக்களுக்கு நித்யையாயிருக்கும் அநித்ய வஸ்துகளுக்கு ஈச்வரஸங்கல்பத்துக்கு ஈடாக ஏறியும் சுருங்கியுமிருக்கும். இங்கு ப்ரவ்ருத்தியாவது, ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான வ்யாபாரம். இவையெல்லாம் வஸ்துக்கள்தோறும் ப்ரமாண ப்ரதிநியதமாயிருக்கும். ப்ரமாணங்கள் வஸ்துக்களைக் காட்டும்போது அவ்வோ வஸ்துக்களின் ஸ்வரூபத்தையும், ஸ்வரூப நிரூபக தர்மங்களையும், நிரூபித ஸ்வரூப விசேஷணங்களையும், வ்யாபாரங்களையும் காட்டும். அதில் ஸ்வரூபத்தை ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே விசிஷ்டமாகவே காட்டும். அந்த ஸ்வரூபத்தைச் சொல்லும்போது அவ்வோ தர்மங்களை இட்டல்லது சொல்லவொண்ணாது. அவற்றைக் கழித்துப் பார்க்கில் சச விஷாண துல்யமாம்.
ஸ்வரூபம் என்பது ஒரு பொருளுக்கு உள்ள தனித்தன்மையை, அதன் அஸாதாரண தன்மையைக் குறிக்கும். அதன் நீடிப்பு (ஸ்திதி) என்பது, அது காலத்தின் போக்கில் அப்படியே இருப்பதாகும். இத்தகைய நிலையானது நிலையாக உள்ள நித்யவஸ்துக்களுக்கு நிலையாகவே இருக்கும். ஆனால், நித்யம் அல்லாத பொருள்களுக்கு, விரிவதும் சுருங்குவதும் ஆகிய தன்மைகள், ஈச்வரனின் ஸங்கல்பத்திற்கு ஏற்றபடியே இருக்கும். அடுத்து, ப்ரவ்ருத்தி என்பது செயல் புரிவதும், செயல் புரியாமல் உள்ள தன்மைகளும் ஆகும். இவை மூன்றும் (ஸ்வரூபம், ஸ்திதி, ப்ரவ்ருத்தி), பல ப்ரமாணங்கள் மூலம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபட்டே காணப்படும். ஒரு ப்ரமாணமானது, ஒரு பொருளைப் பற்றிக் கூறுகையில், அந்தப் பொருளின் ஸ்வரூபம், அந்தப் பொருளின் ஸ்வரூபத்தை விளக்கும் தன்மைகள், மற்ற தன்மைகள், அதன் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையுமே குறிப்பிடும். ஸ்வரூபத்தைப் பற்றிக் கூறும்போது, அந்த ஸ்வரூபத்தின் தன்மைகளும் கூறப்படும். ஒரு பொருளுடைய ஸ்வரூபத்தின் தன்மைகளைக் கூறாமல், அதன் ஸ்வரூபத்தைப் பற்றிக் கூற இயலாது. ஒரு பொருளைப் பற்றிய தன்மைகளைப் பற்றிக் கூறாமல், அந்தப் பொருளைப் பற்றி மட்டுமே கூற முற்படுவது, முயலின் காது பற்றிப் பேசுவது போன்றே ஆகும்.