Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

தத்வ த்ரய வேறுபாடுகள் குறித்த விளக்கம்

மூலம் - இவற்றில் வைத்துக் கொண்டு, “அசேதனா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே அநாதிர்பகவாந் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே, கலா முஹூர்த்தாதி மயச்ச காலோ ந யத்விபூதே: பரிணாமஹேது:, ஞானானந்தமயா லோகா:, காலம் ஸ பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு:” இத்யாதிகளிலே த்ரிகுண கால சுத்த ஸத்வரூபங்களான த்ரிவித அசேதனங்களுடைய ஸ்வபாவஞ் சொல்லிற்று.

இவற்றில் அனுபவிக்கpபடும் பொருள்களான அசேதனங்கள் மூன்று வகைப்படும். அவையாவன, “ஸத்வ, ரஜோ, தாமஸ குணங்களுடன் கூடிய ப்ரக்ருதி, காலம், சுத்தஸத்வம்”, என்பதாகும். இவற்றில் ப்ரக்ருதியின் தன்மை பரம ஸம்ஹிதையில் (2) - அசேதனா பரார்த்தா ச நித்யா ஸததவீக்ரியா த்ரிகுணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே - ப்ரக்ருதி அறிவற்றது, எப்போதும் மற்றவர்களுக்காகவே உள்ளது, தனது ஸ்வரூபம் அழியாமல் உள்ளது, எப்போதும் மாறியபடி உள்ளது, ஸத்வம் முதலான மூன்று குணங்கள் கொண்டது, கர்மம் இயற்றும் ஜீவன்களுக்கு கர்மத்தின் பலனை அனுபவிக்கும் சரீரமாக உள்ளது - என்று கூறப்பட்டது. அடுத்து காலத்தின் தன்மை குறித்து ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-2-26) - அநாதிர்பகவாந் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே - பகவான் என்று அவனுக்குச் சரீரமாக உள்ள காலத்திற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை - என்றது. மேலும் காலம் குறித்து ஸ்ரீவிஷ்ணுபுராணம் (4-1-84) - கலா முஹூர்த்தாதி மயச்ச காலோ ந யத்விபூதே: பரிணாமஹேது - வினாடி, முஹூர்த்தம் என்று அழைக்கப்படும் காலமானது, எம்பெருமானின் நித்யவிபூதியில் எந்தவிதமான மாற்றங்களையும் உண்டாக்குவதில்லை - என்றது. அடுத்து சுத்தஸத்வம் விவரிக்கப்படுகிறது. ப்ரக்ருதிக்கு அப்பால் (நித்யவிபூதி) உள்ள அனைத்தும் (அசேதனங்களாக உள்ளபோதிலும்) சுத்த ஸத்வத்தால் ஆனவை. ஆகவே இவை - ஞானானந்தமயா லோகா - ஞானமும் ஆனந்தமும் நிறைந்தவையாக உள்ளன. மேலும் மஹாபாரதம் சாந்திபர்வம் (196-9) - காலம் ஸ பசதே தத்ர ந காலஸ்தத்ர வை ப்ரபு: - நித்யவிபூதியில் பகவான் காலத்தை நிர்ணயிக்கிறான், அங்கு காலமானது எந்த மாறுபாடுகளையும் ஏற்படுத்துவதில்லை - என்றது. இப்படியாக ப்ரக்ருதி, காலம், சுத்த ஸத்வம் ஆகிய மூன்று அசேதனங்களின் தன்மைகள் விளக்கப்பட்டன.