Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
தத்த்வ த்ரயமும், இதனை அறியவேண்டிய காரணமும்
மூலம் - ஸம்பந்தமும் அர்த்தபஞ்சகமுங்கூட ஆறு அர்த்தமறிய வேண்டியிருக்க, இவற்றில் ஏகதேசமான தத்த்வத்ரயத்தை முமுக்ஷுவுக்கு விசேஷித்து அறியவேண்டுமென்று ஆசார்யர்கள் உபதேசித்துப் போருகைக்கு அடியென்னென்னில் - அதுக்கடி ப்ரக்ருதி ஆத்ம க்ரமமும், ஸ்வதந்த்ர ஆத்ம க்ரமமும், இதுக்கு நிதானமான அநீச்வரவாத ருசியுமான மஹாவிரோதிகளை முற்படக் கழிக்கப் ப்ராப்தமாகை. இத்தை நினைத்து போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபத்தாலே சாஸ்த்ரங்களிலே தத்த்வ விவேகம் பண்ணுகிறது.
அர்த்தபஞ்சகம் மற்றும் ஜீவ-ஈச்வர உறவு என்பது சரீர-ஆத்ம உறவு என்னும் கருத்துடன் கூடிய ஆறு தத்வங்கள் முமுக்ஷுவால் அறியப்படவேண்டியவை ஆகும். இங்கு கூறப்படும் மூன்று தத்வங்களும், இந்த ஆறு தத்வங்களிலேயே அடங்கிவிடுகின்றன. அப்படி உள்ளபோது, இவற்றை நமது ஆசார்யர்கள் ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும் என்ற சந்தேகம் எழலாம். இதற்குக் காரணம், “உடலே ஆத்மா என்ற மயக்கம், ஜீவன் சுதந்த்ரமானவன்”, என்ற மயக்கங்கள் நீங்கவேண்டும் என்பதற்காகும். இந்த மயக்கங்கள் உண்டாகக் காரணம், எம்பெருமான் இல்லை என்று எண்ணுவதே ஆகும். இவை அனைத்துமே மோக்ஷத் தடைகள் ஆகின்றன. ஆகவே சாஸ்த்ரங்கள் தத்த்வங்களை மூன்றாகப் பிரித்தன; அவையாவன, “அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது, இவை இரண்டையும் நியமிப்பவன்”, என்பதாகும்.