Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
அர்த்தபஞ்சகம் – 5 – தடுக்கும் விரோதி
மூலம் - கர்மயோகாதிகளில் ப்ரவ்ருத்தனுக்கு “நேஹாபிக்ரம நாசோ அஸ்தி” இத்யாதிகளிற்படியே இட்டபடை கற்படையாய் என்றேனுமொரு நாள் பலஸித்தியுண்டா மென்கிறவிதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர ஜன்மாந்தராதிகளில் எதிலேயென்று தெரியாது. அனுகூல்யம் மிகவுமுண்டாயிருக்க வஸிஷ்டாதிகளுக்கு விலம்பங்காணா நின்றோம். ப்ரதிகூல்யம் மிகவுண்டாயிருக்க வ்ருத்ர க்ஷத்ரபந்து ப்ரப்ருதிகளுக்குக் கடுக மோக்ஷமுண்டாகக் காணா நின்றோம். ஆதலால் விலம்ப ரஹித மோக்ஷ ஹேதுக்களான ஸுக்ருத விசேஷங்கள் ஆர்பக்கலிலே கிடக்குமென்றும் தெரியாது. விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்குக் காரணங்களான துஷ்கர்ம விசேஷங்களும் ஆர்பக்கலிலே கிடக்குமென்றுந்தெரியாது.
கர்மயோகத்தில் ஈடுபட்டவனுக்கு அந்த முயற்சி வீணாவதில்லை என்பதை கீதை (2-40) - நேஹாபிக்ரம நாசோ அஸ்தி - என்று கூறியது காண்க. அந்தக் கர்மயோகமானது கல்லால் கட்டப்பட்ட சுவர் போன்று என்றும் நிலையாக இருக்கும். அதன் பலன், “இந்தக் கல்பத்தின் முடிவிலா, மன்வந்தரத்தின் முடிவிலா, யுகத்தின் முடிவிலா அல்லது ஜன்மத்தின் முடிவிலா”, என எப்போது கிட்டும் என்று யாராலும் தெளிவாகக் கூற இயலாது. பகவான் உகப்படையும் செயல்கள் பல செய்த வசிஷ்டர் முதலானோர் கூட, பல காலம் காத்திருக்கும்படி ஆனது. ஆனால், பகவானை விரோதித்த வ்ருத்ராஸுரன், க்ஷத்ரபந்து முதலானோர் மிகவும் எளிதாக, தாமதம் இன்றி மோக்ஷம் சென்றனர். ஆக மோக்ஷம் இட்டுச் செல்லக்கூடிய விசேஷமான கர்மங்களை யார் இயற்றினர் என்று கூற இயலாது. இது போன்று, மோக்ஷம் தாமதிக்கும்படியான செயல்கள யார் செய்தனர் என்றும் கூற இயலாது.