Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
அர்த்தபஞ்சகம் – 5 – தடுக்கும் விரோதி
மூலம் - ப்ராப்தி விரோதியாவது அவித்யா கர்ம வாஸனாதி ரூபமான மோக்ஷ ப்ரதிபந்தக வர்க்கம். இதில் ப்ரதானம் அநாதியாக ஸந்தந்யமாநமான ஆஜ்ஞாதி லங்கனமடியாகப் பிறந்த பகவந்நிக்ரஹம். இது க்ஷேத்ரஜ்ஞர்க்கு ஞானஸங்கோசகரமான த்ரிகுணாத்மக ப்ரக்ருதி ஸம்ஸர்க்க விசேஷத்தை உண்டாக்கியும், இப்ப்ரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீரேந்த்ரியாதிகளோடே துவக்கி “திண்ணமழுந்தக் கட்டி பல செய்வினை வன்கயிற்றால் புண்ணை மறையவரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே” என்றும், “அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்” என்றும் சொல்லுகிறபடியே தேஹேந்த்ரியாதி பரதந்த்ரனாக்கியும், அவ்வவஸ்தையிலும் சாஸ்த்ர வச்யதை கூடாத திர்யகாதி தசைகளிலே நிறுத்தியும், சாஸ்த்ர யோக்யங்களான மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும், அவற்றில் இழியாதவர்களையுமுள்பட “பகவத் ஸ்வரூப திரோதானகரீம் விபரீத ஞான ஜனனீம் ஸ்வவிஷயாயாச்ச கோப்யபுத்தேர் ஜநநீம்” என்கிறபடியே இம்மூலப்ரக்ருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வஞான விபரீதஞான விஷய ப்ராவண்யங்களைப் பண்ணியும், இவையடியாக “ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிறபடியே ஸுக லவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதி லங்கனத்தைப் பண்ணுவித்தும், “பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந: புந: நஷ்டப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர:” என்கிறபடியே மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக “க்ஷிபாம்யஜஸ்ரம்” இத்யாதிகளிற்படியே கர்ப்ப ஜன்ம ஜரா மரண நரகாதி சக்ர பரிவ்ருத்தியிலே பரிப்ரமிப்பித்தும், க்ஷுத்ர ஸுகாதிகளுக்கு ஸாதனமான ராஜஸ தாமஸ சாஸ்த்ரார்த்தங்களைக் கொண்டு “யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா: ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:” என்கிறபடியே தன்னோடு ஒக்கவொழுகு சங்கிலியிலே கட்டுண்டு உழலுகிற க்ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப்பண்ணியும், அவர்கள் கொடுத்த ஜுகுப்ஸாவஹ க்ஷுத்ர புருஷார்த்தங்களாலே க்ருமிகளைப்போலே க்ருதார்த்தராக மயக்கியும், யோக ப்ரவ்ருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல் நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல் மூளப்பண்ணிச் சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலைசாய்ப்பித்தும், ஆத்மப்ரவணரையும் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டம் ப்ரக்ருதி வியுக்தமென்கிற இவ்விரண்டு படியிலும் ப்ரஹ்மாத்யஷ்டையாலேயாதல், ஸ்வரூப மாத்ரத்தாலேயாதல் உபாஸிக்க மூட்டி அவை நாலுவகைக்கும் பலமாக அல்பாஸ்வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும், ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மசிந்தந ப்ரவ்ருத்தரானவர்களையும் ஸ்வாத்ம சரீரக பரமாத்ம சிந்தநபரரையும் அந்தராயமான ஆத்மானுபவத்தாலேயாதல், அஷ்டௌ ஸ்வர்யஸித்திகளாலேயாதல், வஸ்வாதி பத ப்ராப்தி ப்ரஹ்மகாயநிஷேவணாதிகளாலேயாதல், அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜகுமாரனுக்குச் சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டமுண்டாமாப் போலே ப்ராரப்த கர்மபலமான தேஹேந்த்ரியங்களிலும் ததநுபந்திகளான பரிக்ரஹங்களிலும் தன்மூல போகங்களிலும் கால்தாழப் பண்ணியாதல் அந்யபரராக்கியும் இப்படிப் பல முகங்களாலே பகவத்ப்ராப்திக்கு விலக்காயிருக்கும், முப்பத்திரண்டடியான துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாமடியிலே விழுந்ததோடு வாசியில்லாதாப்போலே ஏதேனுமொரு பர்வத்திலே அந்தராய முண்டானாலும் இவன் ஸம்ஸாரத்தைக் கடந்தானாகான்.
மோக்ஷம் பெறுவதற்குத் தடையாக உள்ளவைகள் அறியாமை (அவித்யை), கர்மம், வாசனை, ப்ரக்ருதி தொடர்பு முதலானவை ஆகும். இதில் முதலாவது தடையாக உள்ளது எதுவென்றால், எல்லையற்ற காலமாக பகவானின் கட்டளைகளைத் தொடர்ந்து மீறியபடி உள்ளதால், அதற்காக அவன் அளிக்கும் தண்டனைகளே ஆகும். இதன் காரணமாக கீழே உள்ள பலவும் நிகழ்கின்றன: 1. மூன்று குணங்களுடன் கூடியதான ப்ரக்ருதியுடன் ஜீவனுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதனல் அவனது ஞானம் சுருங்கி விடுகிறது; 2. ஜீவனையும், ப்ரக்ருதி தொடர்புடைய சரீர-இந்த்ரியங்களையும் சேர்த்து விடுகிறது. மேலும் ஜீவனை சரீர-இந்த்ரியங்களின் பிடிகளில் சிக்கவைக்கிறது. இதனை நம்மாழ்வார் திருவாய்மொழியில் (5-1-5) - திண்ணமழுந்தக் கட்டி பல செய்வினை வன்கயிற்றால் புண்ணை மறையவரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே - எனது கர்மபலன் மூலம் உண்டான பாவம் என்னும் கயிற்றால், என்னை இந்த உடலுடன் அழுத்தமாகக் கட்டி, புண் நிறைந்த சரீரத்தை தோலால் மூடி உலவ வைத்தாய் - என்றும், (3-2-1) - அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன் - ஸ்ருஷ்டியின்போது உண்டான சரீரத்தின் மகிழ்வுக்காகத் திரிவேன் - என்றும் கூறினார்; 3. ஜீவனை சாஸ்த்ரங்களைப் பின்பற்ற இயலாத விலங்கு போன்ற சரீரம் எடுக்கும்படிச் செய்து விடுகிறது; 4. சாஸ்த்ரங்களைப் பின்பற்றக் கூடிய மனிதப் பிறவி அளித்தாலும், அவன் மனதை, வேதங்களுக்குத் தவறான விளக்கம் கூறும் மதங்களில் ஈடுபடுத்துகிறது; 5. ராமானுஜர் சரணாகதி கத்யத்தில் - பகவத்ஸ்வரூப திரோதானகரீம் விபரீத ஞான ஜனனீம் ஸ்வவிஷயாயாச்ச கோப்யபுத்தேர்ஜனனீம் - எம்பெருமானின் ஸ்வரூபம் குறித்து அறிய இயலாதபடி செய்வதும், ஒரு பொருளை வேறொன்றாக அறியும்படிச் செய்வதும், தானே தனக்கு இன்பமானவன் என்ற எண்ணம் தோன்றும்படிச் செய்வதும் ஆகிய ப்ரக்ருதியை - என்றார். மாயாஜாலம் செய்யும் ஒருவன், அனைவரையும் மயக்கும் பொருட்டு, தனது கைகளில் வைத்துள்ள மயில்தோகை போன்று, ப்ரக்ருதியானது சரீரத்தையும் இந்த்ரியங்களையும் வைத்துள்ளது. இதன் மூலம் ஜீவனை மயக்கி அவனுக்கு உண்மை எது என்ற அறியாமை, தவறான அறிவு, புலன் விஷயங்களில் ஈடுபடுதல் போன்றவற்றை உண்டாக்குகிறது; 6. இப்படியாக, ஜீவனை பகவானின் ஆணைகளைப் பின்பற்றாமல் இருக்கச் செய்துவிடுகிறது. தனது இன்பங்களுக்காகத் தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடும்படிச் செய்கிறது. இதனை நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-9-9) - ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ - எனது ஆத்மா திகைத்து நிற்கும்படி ஐந்து இந்த்ரியங்களும் என்னைக் கட்டி இழுக்கின்றன, இவ்விதம் சிற்றின்பத்தால் பாவியான என்னை மேலும் நீ வருந்தும்படிச் செய்யலாமோ? – என்றார்; 7. ஒரு தவறு என்பது மேலும் மேலும் பாபங்களாக வளர்கின்றன. இதனை மஹாபாரதம் உத்யோக பர்வம் (35-73) - பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந: புந: நஷ்டப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: - மீண்டும் மீண்டும் செய்யப்படும் பாவம் அறிவை அழித்து விடுகிறது, இவ்விதம் அறிவை இழந்த ஒருவன் மேலும் மேலும் பாவங்களையே செய்கிறான் - என்றது. இதன் காரணமாக ஜீவனை கர்ப்பம் - பிறப்பு - கிழத்தன்மை - மரணம் - நரகம் என்னும் சுழற்சியில் ஆழ்த்தி விடுகிறான். இதனைக் கீதையில் (16-19) – க்ஷிபாமி அஜஸ்ரம் - அவர்களை அசுர கர்ப்பத்தில் தள்ளுகிறேன் – என்றான்; 8. தாழ்ந்த சுகங்களுக்கு உறுப்பாக உள்ள ராஜஸ தாமஸ சாஸ்த்ரங்களைக் கைக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் தங்களைப் போன்றவர்களும், தங்களுக்குச் சமமான சங்கிலிகளால் கட்டப்பட்டவர்களும் ஆகிய தாழ்ந்த தெய்வங்களின் கால்களின் விழும்படி ஆகிறது. இதனை கீதையும் (17-4) - யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா: ப்ரேதான் பூதகணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா - ரஜோகுணம் மேலோங்கி உள்ளவர்கள், யக்ஷர்கள் மற்றும் அசுரர்களை ஆராதனை செய்கின்றனர், தமோகுணம் மேலோங்கி உள்ளவர்கள், பூதங்களையும் ப்ரேதங்களையும் ஆராதனை செய்கின்றனர் - என்றது காண்க; 9. இந்தத் தாழ்ந்த தெய்வங்கள் இவர்களுக்கு அருவருப்பைத் தரும் மிகவும் தாழ்ந்த பலன்களை அளிக்கின்றன. சேற்றில் மகிழ்வாக உள்ள புழுக்கள் போன்று, இந்த அற்பப் பலன்களைத் தங்களுக்குக் கிட்டிய உயர்ந்த பலனாக எண்ணியபடி உள்ளனர்; 10. யோகங்களில் ஈடுபட்ட பலரும் தாழ்ந்த தேவதைகளையே உபாஸிக்கின்றனர். ஒரு சிலர் தாழ்ந்த தேவதைகளை உபாஸிப்பதைக் கைவிட்டு, நாம உபாஸனத்தில் ஈடுபடுகின்றனர் (நாம உபாஸனம் என்பது - வாக்கு, மனம், நீர் முதலான அசேதனங்களை ப்ரஹ்மமாக எண்ணி உபாஸனை செய்தல். இது சாந்தோக்ய உபனிஷத்தில் கூறப்பட்ட பூமவித்யை என்பதாகும்). இதன் மூலம் கிட்டப்பெறும் தாழ்ந்த பலன்களில் அவர்கள் ஈடுபடும்படி ஆகிறது. இப்படியாக யோகம் என்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகச் செய்யப்படுகிறது; 11. அடுத்து ஆத்மாவின் விஷயத்தில் ஈடுபட்டபடி உள்ளவர்கள் காண்போம். ஆத்மாவானது ப்ரக்ருதியுடன் தொடர்புடையதாகவோ அல்லது தொடர்பற்றதாகவோ கருதியபடி த்யானிக்கின்றனர். மேலும் ப்ரஹ்மாகவோ, ஆத்ம ஸ்வரூபமாகவோ த்யானித்தபடி உள்ளனர். இப்படியாக உள்ள நான்கு வகைத் த்யானங்களில் ஈடுபட்ட இவர்கள், பகவத் அனுபவத்தை விட, மிகவும் தாழ்ந்த ஆத்ம அனுபவத்தை பலனாக அடைகின்றனர். அதன் பின்னர் மீண்டும் ஸம்ஸாரத்தில் சிக்குகின்றனர்; 12. ஒரு சிலர் ப்ரஹ்மத்தையே த்யானித்தபடி இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் தங்களது ஆத்மாவை த்யானித்து, தங்களின் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் இருப்பதாகவும், தங்களது ஆத்மாவைத் தனது சரீரமாக ப்ரஹ்மம் கொண்டுள்ளது என்றும் த்யானிக்கின்றனர். ஆக இவர்கள் மறைமுகமாகத் தங்கள் ஆத்மாவிலேயே ஈடுபடுவதால், கைவல்ய நிலையை அடைகின்றனர். அல்லது எட்டு விதமான ஸித்திகளை அடைந்து (அஷ்டமாஸித்தி) விடுகின்றனர். அல்லது வசுக்கள் போன்ற பிறவி அடைகின்றனர். அல்லது ப்ரம்மன் முதலானோரின் உடலில் புகும் தன்மை பெறுகின்றனர். இவர்களின் நிலை எவ்விதம் உள்ளது என்றால் - மணிமகுடம் சூட்டுவதற்கான நிலையில் உள்ள அரசகுமாரன், தான் சிறையில் இருந்தபோது தன்னைப் பார்த்துக்கொண்ட பணிப்பெண்கள் பக்கம் சாய்வது போன்று உள்ளது. ஆக இவர்கள் மிகவும் உயர்ந்த புருஷார்த்த நிலையில் இருந்து நழுவுகின்றனர் என்று கருத்து. ஆக, தங்கள் கர்மபலன் காரணமாக உண்டான சரீரம் மற்றும் இந்த்ரியங்களால் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவைகளின் மூலம் ஏற்படும் போகங்களில் திளைத்தபடி உள்ளனர். ஆக இவர்கள் தங்கள் புருஷார்த்தத்தைக் கைவிட்டு தாழ்ந்த இன்பங்களில் ஈடுபட்டபடி உள்ளனர். இப்படியாக பகவானை அடைவதற்குப் பல தடைகள் உள்ளன. சரியான பாதையில் செல்ல முப்பத்திரண்டடி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒருவன் முதல் படியில் தடுக்கி விழுந்தாலும், முப்பத்திரண்டாவது படியில் தடுக்கி விழுந்தாலும் என்ன வேறுபாடு உள்ளது? இதுபோன்று எந்தச் சூழலாக இருந்தாலும், எந்தக் காலமாக இருந்தாலும் மேலே கூறப்பட்ட தடைகள் ஏற்படுமாயின், ஜீவன் ஸம்ஸாரத்தில் உழன்றபடி இருப்பான்.