Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

மூன்று வகையான சேதனர்கள்

மூலம் - இவர்களில் பத்தரானவர் அநாதி கர்ம ப்ரவாஹத்தாலே அநுவ்ருத்த ஸம்ஸாரராய் ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த விபாக பாகிகளான க்ஷேத்ரஜ்ஞர். முக்தராவார் சாஸ்த்ர சோதிதங்களான உபாய விசேஷங்களாலுண்டான பகவத்ப்ரஸாதத்தாலே அத்யந்த நிவ்ருத்த ஸம்ஸாரராய் ஸங்கோச ரஹித பகவதனுபவத்தாலே நிரதிசயானந்தரா யிருக்குமவர்கள். நித்யராவார் ஈச்வரனைப் போலே அநாதியாக ஞானசங்கோச மில்லாமையாலே “ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:” என்கிறபடியே அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரராய்க் கொண்டு நித்யகைங்கர்யம் பண்ணுகிற அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகள். இவர்களெல்லார்க்கும் ஸாதாரணமான ரூபம் அணுத்வ ஞானானந்தாமலத்வாதிகளும் பகவச்சேஷத்வ பாரதந்த்யாதிகளும். முமுக்ஷுவான தனக்கு அஸாதாரணமாக அறிய வேண்டும் ஆகாரங்கள் உபோத்காதத்திலே சொன்னோம், மேலும் கண்டு கொள்வது.

பத்தர்கள் என்பவர்கள் எல்லையற்ற காலமாகத் தொடந்து வரும் கர்மம் காரணமாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் உழன்றபடி உள்ளவர்கள் ஆவார்கள். நான்முகன்ன் தொடக்கமாக புல் ஆகிய அனைத்தும் க்ஷேத்ரஜ்ஞர் என்பதாகும். முக்தர் என்பவர்கள் சாஸ்த்ரங்களில் கூறிய உபாயங்களைச் சரியானபடி பின்பற்றி, பகவானின் கருணையைப் பெறுகின்றனர்; இதனால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, பகவத் அனுபவம் கிட்டப்பெற்றதால், எல்லையற்ற ஆனந்தத்தில் மூழ்கியபடி உள்ளனர். நித்யர்கள் என்பவர்கள் தங்களது ஞானம் எப்போதும் சுருங்காமல் உள்ளவர்கள் ஆவர், இந்த விஷயத்தில் அவர்கள் ஈச்வரனையே ஒத்துள்ளனர், இதனை ஸ்ரீகுணரத்னகோஸத்தில் (27) - ஸவயஸ இவ யே நித்ய நிர்தோஷ கந்தா - அவனைப் போன்றே ஒத்த வயது கொண்டவர்களாகவும், அவனைப் போன்றே தோஷங்கள் அற்றவர்களாகவும் - என்று கூறினார். இவர்கள் ஸம்ஸாரத்தில் சிக்காமல் பகவானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்தபடி உள்ள ஆதிசேஷன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலானோர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக உள்ள தன்மைகள், “அணு போன்று அளவுள்ள தன்மை, ஞானமயமாக இருத்தல், ஆனந்தமயமாக இருத்தல், தோஷங்கள் அற்று இருத்தல்”, என்பவையாகும். இவர்கள் அனைவரும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும், அவனது ஸங்கல்பத்திற்கு அடிபணிந்தபடியும் உள்ளனர். இவர்களில் முமுக்ஷுவுக்கு உள்ள விசேஷம் என்னவென்று அறிந்து கொள்ளவேண்டும். இதனை உபோத்காத அதிகாரத்தில் நாம் கண்டோம், இனிவரும் அதிகாரங்களிலும் மேலும் கூறப்பட உள்ளது.