Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
லீலாரூபம் கொண்டவன்
மூலம் - இவ்விபூதிகளில் சேதநங்களாயும் அசேதநங்களாயுமுள்ள இரண்டு வகையும் லீலார்த்தங்களாயும் போகார்த்தங்களாயும் விபக்தங்களாயிருக்கும் அநுஸந்தேயம் பொதுவாயிருக்க ரஸ வைஷம்யத்தாலே லீலா-போக-விபாகம் யதாலோகம் கண்டு கொள்வது. அப்படியே ஜன்மாத்யஸ்ய யத:, க்ரீடா ஹரேரிதம் ஸர்வம், க்ரீடதோ பாலகஸ்யேவ, பால: க்ரீடநகைரிவ, ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஜந்துபி:, லோகவத்து லீலா கைவல்யம் என்கிறபடியே லீலாரூப ஜகத்வ்யாபார லக்ஷணமாக அநுஸந்தேயம்.
எம்பெருமானின் விபூதிகள் சேதனம் என்றும் அசேதனம் என்றும் இரு வகைப்படும். இவை அவனது லீலைக்காகவும் அனுபவிப்பதற்காகவும் உள்ளன. இவ்விதம் அவனது லீலைக்காகவும், அனுபவத்திற்காகவும் உள்ளன என்ற பிரிவு ரஸத்திற்காக மட்டுமே உள்ளது அன்றி, அனைத்தும் பொதுவாக அவனால் ஏற்கும்படியே உள்ளன. பகவான் இந்த உலகில் ஈடுபட்டபடி உள்ளது என்பது அவனது லீலை காரணமாகவே என்பதை அடுத்துள்ள வரிகளின் மூலம் அறியலாம்: ப்ரஹ்மஸூத்ரம் (1-1-2) - ஜன்மாத்யஸ்ய யத: - அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன; மஹாபாரதம் சாந்திபர்வம் (206-58) - க்ரீடா ஹரேரிதம் ஸர்வம் - இவை அனைத்தும் ஸ்ரீஹுரியின் விளையாட்டு; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-2-18) - க்ரீடதோ பாலகஸ்யேவ – ஒரு சிறு குழந்தையின் விளையாட்டு போன்று அவனுக்குச் சுலபமானது; மஹாபாரதம் சபாபர்வம் (40-78) - பால: க்ரீடநகைரிவ - பொம்மைகள் வைத்து விளையாடும் குழந்தை போன்று, நம்மை வைத்து விளையாட்டு செய்கிறான்; ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஜந்துபி: - பந்துகள் வைத்து விளையாடுவது போன்று ஸ்ரீஹரியே, உனது விளையாட்டு உள்ளது; ப்ரஹ்மஸூத்ரம் (2-1-33) - லோகவத்து லீலா கைவல்யம் - இவை அனைத்தும் அவனது விளையாட்டுக்காகவே.