Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

ஈச்வரன் எழில் பொங்கும் திவ்யமங்கள திருமேனி உடையவன்

மூலம் - ஸதைகரூப ரூபாய, நித்யஸித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸெள ஸந்நிதிம் ப்ரஜேத், ஸமஸ்தாச்சக்தயச்சைதா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விச்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர்மஹத், இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ:, ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந:, ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி: மாம்ஸமேதோ அஸ்திஸம்பவா, பூஜைச்சதுர்பி: ஸமுபேதமேதத் ரூபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச, ருக்மாபம் ஸ்வபந் தீ கம்யம், தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம், பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே, அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம், பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத், தமஸ: பரமோ தாதா சங்கம் சக்ர கதா தர: என்கிறபடியே ஸர்வஜகதாச்ரயமான அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டமாக அநுஸந்தேயம். இவ்விக்ரஹம் பர வ்யூஹ விபவ ஹார்த்தார்சாவதார ரூபேண பஞ்சப்ரகாரமாயிருக்கும்படியும் இவற்றிலுள்ள விசேஷங்களும் பகவச்சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும்.

அனைத்து உலகங்களுக்கும் இருப்பிடமாக உள்ள எம்பெருமானின் திருமேனியானது அப்ராக்ருதமானது, திவ்யமானது, மங்களகரமானது என்று அறியவேண்டும். இந்தக் கருத்துக்களை பாஞ்சராத்ர ஆகமத்திலிருந்தும் மற்ற ஸம்ப்ரதாய முறைகளிலிருந்தும் அறியலாம். இதனை அடுத்துள்ள பல வரிகளிலும் காண்க: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-2-1) - ஸதைகரூப ரூபாய - எப்போதும் மாறாமல் ஒரே போன்ற திருமேனி உள்ளவன்; பௌஷ்கர ஸம்ஹிதை - நித்யஸித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸெள ஸந்நிதிம் ப்ரஜேத் – பௌஷ்கரனே! எப்போதும் உள்ள அவனது திருமேனி குறித்தும், அவனே அனைத்திலும் மேம்பட்டவன் என்பது குறித்தும் யாருக்கு அசைக்க இயலாத நம்பிக்கை உள்ளதோ அவனிடம் எம்பெருமான் எப்போதும் உள்ளான்; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-7-70) - ஸமஸ்தாச்சக்தயச்சைதா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விச்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர்மஹத் - இந்த உலகில் காணப்படும் சரீரங்கள் அனைத்தைக் காட்டிலும் வேறானதாக ஸ்ரீஹரியின் திருமேனி உள்ளது. அந்தத் திருமேனியிலேயே அனைத்து சக்திகளும் நிலையாக உள்ளன; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-84) - இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ: - அனைவருக்கும் இன்பம் அளிக்கும் விதமான திருமேனியைத் தனது ஸங்கல்பத்தால் எடுத்துக் கொள்பவன்; மஹாபாரதம் சாந்திபர்வம் (206-60) - ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந: - பரமாத்மாவின் திருமேனி பஞ்சபூதங்கள் சேர்வதால் உண்டாகும் சரீரம் அல்ல; ஸ்ரீவராஹபுராணம் (31-40) - ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி: மாம்ஸமேதோ அஸ்திஸம்பவா - எம்பெருமானின் திருமேனியானது மாமிஸம், மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றால் ஆன சரீரம் அல்ல; மஹாபாரதம் மௌஸலபர்வம் (5-34) - பூஜைச்சதுர்பி: ஸமுபேதமேதத்ரூபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச - அவனது திருமேனி நான்கு திருக்கரங்களுடன் உள்ளது, மிகவும் மேன்மை உடையது, பரமபதத்தில் உள்ளது; மனு ஸ்ம்ருதி (12-122) - ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம் - தங்கம் போன்று ப்ரகாசம் உடையவன். அவனை மனதால் கனவில் காண்பது போன்று மட்டுமே அடைய இயலும்; கீதை (11-13) - தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் - அவனது திருமேனியில் இந்த உலகம் ஒரு சிறிய பகுதியாக உள்ளதைக் கண்டான்; கீதை (11-15) - பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ – தேவாதிதேவனே! உனது திருமேனியில் அனைத்து தேவதைகளையும் நான் காண்கிறேன்; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-22-76) - அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம் - ஆயுதங்களும் ஆபரணங்களும் தங்கும் இடமாக அவன் திருமேனி உள்ளது; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-22-66) - பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத் - இந்த உலகங்கள் முழுவதும் அவனது திருமேனியில் ஆபரணங்களாகவும் ஆயுதங்களாகவும் உள்ளன; யுத்தகாண்டம் (114-25) - தமஸ: பரமோ தாதா சங்கம் சக்ர கதா தர: - ப்ரக்ருதிக்கும் மேலே உள்ளவனாகவும், சங்கு-சக்ர-கதை உள்ளவனாகவும்.