Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்
ஈச்வரன் எல்லையற்ற கல்யாண குணங்கள் கொண்டவன்
மூலம் - தைர்யுக்த: ச்ரூயதாம் நர:, தமேவம் குண ஸம்பந்நம், ஜ்யேஷ்டம் ச்ரேஷ்ட குணைர் யுக்தம், ஏவம் ச்ரேஷ்ட குணைர் யுக்த:, குணைர் விருருசே ராம:, தமேவம் குண ஸம்பந்நம் அப்ரத்ருஷ்ய பராக்ரமம், பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே, ஆந்ருசம்ஸ்யமனுக்ரோச: ச்ருதம் சீலம் தமச்சம: ராகவம் சோபயந்த்யேதே ஷட்குணா: புருஷோத்தமம், விதித: ஸ ஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல:, சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய:, நிவாஸவ்ருக்ஷ: ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா கதி: தேஜோ பலைச்வர்ய மஹாவபோத ஸுவீர்ய சக்த்யாதி குணைகராசி:, ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதும் குணாந், யதா ரத்நாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா:, வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை:, சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர: க்வாபி விசுத்தசேதா: ஸ தே குணாநாமயுதைகமம்சம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத, தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா: யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷௌ அந்யே அப்யந்தர்நிவேசிதா:, இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத் மதி க்ஷயாந் நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத், வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய், உயர்வற உயர்நலம் உடையவன் என்கிறபடியே ப்ராப்யத்வ ப்ராபகத்வோப யுக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம்.
அடையக்கூடிய பொருளாக இருப்பதற்கு ஏற்ற அனைத்துக் குணங்களையும், அவ்விதம் அடைவதற்கு ஏற்ற உபாயமாக இருப்பதற்கான குணங்களையும் அவன் கொண்டுள்ளான். இதனைக் கீழே உள்ள பல வரிகளில் காணலாம் : பாலகாண்டம் (1-7) - தைர்யுக்த: ச்ரூயதாம் நர: - அந்தக் குணங்கள் அனைத்தும் கொண்ட மனிதனைப் பற்றிக் கூறுகிறேன்; அயோத்யாகாண்டம் (2-48) - தமேவம் குண ஸம்பன்னம் - இவ்விதமாகக் குணங்கள் கொண்ட இராமனை; பாலகாண்டம் (1-20) - ஜ்யேஷ்டம் ச்ரேஷ்ட குணைர் யுக்தம் - மூத்தவனும், மிகவும் உயர்ந்த குணங்கள் கொண்டவனும் ஆகிய இராமன்; அயோத்யாகாண்டம் (11-31) - ஏவம் ச்ரேஷ்ட குணைர் யுக்த: - இவ்விதமாக மிகவும் உன்னதமான குணங்கள் கொண்ட இராமனை; அயோத்யாகாண்டம் (2-47) – குணைர் விருருசே ராம: - குணங்கள் மூலமாக இராமன் விளங்கினான்; அயோத்யாகாண்டம் (1-34) - தமேவம் குண ஸம்பந்நம் அப்ரத்ருஷ்ய பராக்ரமம் - இவ்விதமாக குணங்களின் இருப்பிடமாக உள்ளவனும், யாராலும் வெல்லப்பட இயலாமல் உள்ளவனும் ஆகிய இராமன்; அயோத்யாகாண்டம் (2-26) - பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே - தசரத மன்னா! உனது புத்ரனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன; அயோத்யாகாண்டம் (33-12) - ஆந்ருசம்ஸ்யமனுக்ரோச: ச்ருதம் சீலம் தமச்சம: ராகவம் சோபயந்த்யேதே ஷட்குணா: புருஷோத்தமம் - தன்னிடம் சரணம் புகுந்தவர்களைக் காக்கும் தன்மை, கருணை, அனைத்து சாஸ்த்ரங்களும் அறிந்துள்ள தன்மை, தாழ்ந்தவர்களுடனும் சரிசமமாகப் பழகும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் முதலான ஆறும் புருஷர்களில் உத்தமனான இராமனை அலங்கரிக்கின்றன; ஸுந்தரகாண்டம் (21-20) - விதித: ஸ ஹி தர்மஜ்ஞ: சரணாகத வத்ஸல: - தர்மம் அனைத்தும் அறிந்த இராமன், தன்னிடம் சரணம் புகுந்தவர்களிடம் மிகுந்த அன்புள்ளவன் என்று அனைவரும் அறிவார்கள் அல்லவோ?; யுத்தகாண்டம் (121-18) - சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய: - இராமா! உன்னையே சரணம் புகுவதற்கு ஏற்றவன் என்றும், சரணம் அடைந்தவர்களைக் காப்பவன் என்றும் மஹரிஷிகள் கூறுகின்றனர்; கிஷ்கிந்தாகாண்டம் (15-19) - நிவாஸவ்ருக்ஷ: ஸாதூனாம் ஆபன்னானாம் பரா கதி: - ஸாதுக்களுக்கு இனிய நிழல் தரும் கற்பக மரம், துன்பத்தில் உள்ளவர்கள் அடையவேண்டிய சிறந்த கதி; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-85) - தேஜோ பலைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி: - தேஜஸ், பலம், ஐச்வர்யம், ஞானம், வீர்யம், சக்தி முதலான உயர்ந்த குணங்களின் இருப்பிடம்; ப்ரஹ்மபுராணம் - ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதும் குணாந் - அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ள விஷ்ணுவின் குணங்களை யார் முழுவதுமாக அறிவார்கள்?; ஸ்ரீவாமனபுராணம் (74-40) - யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா: - ஸமுத்ரத்தில் உள்ள இரத்தினக் கற்களைக் கணக்கிட இயலாது. அது போன்று, சக்கரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது; மஹாபாரதம் கர்ணபர்வம் (83-15) - வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை: - அனைத்துத் தேவர்களும் ஒன்றாக்கூடி நின்று, பல பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் அவனது குணங்களை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது; ஸ்ரீவராஹபுராணம் (73-35) - சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர: க்வாபி விசுத்தசேதா: ஸ தே குணாநாமயுதைகமம்சம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத - ப்ரம்மனின் ஆயுள், பல ஆயிரக்கணக்கான வாய்கள், மிகவும் தூய்மையான மனம் ஆகியவற்றை உடைய ஒருவன் உள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவனால் கூட உனது குணத்தின் பதினாயிரத்தின் ஒரு பகுதியைக் கூற இயலுமோ இயலாதோ?; தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா: யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷௌ அந்யே அப்யந்தர்நிவேசிதா: - கணக்கற்ற குணங்களை நீ கொண்டிருந்தாலும் ஆறு குணங்களே உனக்கு மிகவும் ப்ரதானமாக உள்ளன. இந்த உலகை நீ வயிற்றில் வைத்தது போன்று, அந்த ஆறு குணங்களும் மற்ற குணங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன; இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத் மதி க்ஷயாந் நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத் - ஆகாயம் முழுவது அம்பால் நிரப்பவேண்டும் என்று புறப்படும் சிலர், தங்களிடம் உள்ள பாணங்கள் தீர்ந்து விட்டதால் ஓய்கின்றனர் அல்லாமல், ஆகாயம் நிரப்பப்பட்டதால் இல்லை. அது போன்று, கோவிந்தனின் குணங்களைக் கூறத் தொடங்குபவர்கள் தங்கள் புத்தி ஓய்ந்ததால் நிறுத்துகின்றனர் அல்லாமல், அவனது குணங்களைக் கூறி முடித்து விட்டதால் அல்ல; திருவாய்மொழி (8-1-8) – வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் - மிகவும் கொடிய வினைப்பயன்கள் உடைய என் போன்றவனையும் உன்பால் ஈர்க்கும் குணங்கள் கொண்டவனே; திருவாய்மொழி (1-1-1) - உயர்வற உயர்நலம் உடையவன்.