Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 4.அர்த்த பஞ்சக அதிகாரம்

ஈச்வரன் பெரியபிராட்டியை அகலாதவன் மற்றும் ஞான ஆநந்த ஸ்வரூபன்

மூலம் - அவ்விடங்களில் அனுஸந்திக்கும்போது, ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:, ஏஷ நாராயண: ஸ்ரீமாந், பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ரதரோ விபு:, ஸ்ரீவத்ஸவக்ஷ நித்யஸ்ரீ:, விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ, ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனமப்ரவீத், ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம், அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம், பவேயம் சரணம் ஹி வ:, பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா, தயா ஸஹாஸீநமநந்த போகினி, காந்தஸ்தே புருஷோத்தம:, ஸ்வபரிசரண போகை: ஸ்ரீமதி ப்ரீயமாணே, ஸ்ரீமதே நிர்மலானந்தோ தந்வதே விஷ்ணவே நம:, ஸ்ரீய:காந்த: அநந்தோ வரகுண கணைகாஸ்பத வபு:, ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ, ஸ்ரீய:பதி: நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப:, நீயும் திருமகளும் நின்றாயால், ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப, கோலத் திருமாமகளோடு உன்னை, நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும், உன் தாமரை மங்கையும் நீயும், அகலகில்லேன் இறையும், உணர் முழு நலம், நந்தா விளக்கே அளத்தற்கரியாய் என்றும் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வாவஸ்தையிலும் ஸஹதர்மசாரிணியான பெரியபிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான அநந்த ஞாநாநந்த ஸ்வரூபமாக அநுஸந்திக்க வேணும்.

பகவானின் ஸ்வரூபத்தை எல்லையற்ற ஞானம் உள்ளதாகவும், எல்லையற்ற ஆனந்தம் உள்ளதாகவும் அறிய வேண்டும். மேலும் அவன் எப்போதும், எந்த உருவிலும், எந்தச் சூழலிலும் தனது நாயகியான பெரியபிராட்டியாரை விட்டுப் பிரியாமல் உள்ளான் என்பதை அறியவேண்டும். அவள், அவனது அனைத்துச் செயல்களிலும் பங்கு கொள்கிறாள் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். அவன் பிராட்டியை இவ்விதம் பிரியாமல் உள்ளான் என்பதை பல ப்ராமாணங்கள் மூலம் அறியலாம். லைங்க புராணம் – ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: - இந்த உலகின் பதியான நாராயணன் மஹாலக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் உள்ளான்; ஹரிவம்ஸம் (113-62) - ஏஷ நாராயண: ஸ்ரீமாந் - இந்த நாராயணன் எப்போதும் மஹாலக்ஷ்மியுடன் உள்ளான்; இராமாயணம் யுத்தகாண்டம் (120-13) - பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ரதரோ விபு: - இராமா! நீயே மஹாலக்ஷ்மியின் நாயகனும், சக்கரத்தை உடையவனும், உலகங்களின் எஜமானனும் ஆகிய நாராயணன் ஆவாய்; இராமாயணம் யுத்தகாண்டம் (114-15) - ஸ்ரீவத்ஸவக்ஷ நித்யஸ்ரீ: - ஸ்ரீவத்ஸம் என்ற மறுவைத் திருமார்பில் கொண்டவனாகவும், மஹாலக்ஷ்மியுடன் இணைந்தவனாகவும் உள்ளாய்; ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-18-17) - விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ - மஹாலக்ஷ்மி விஷ்ணுவை விட்டுப் பிரியாதவள்; இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-6) - ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனமப்ரவீத் - லக்ஷ்மணன், இராமனிடம் சீதையின் முன்பாக இவ்விதம் கூறினான்; இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-2) - ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் - தன்னைச் சரணம் புகுந்தவர்களைக் காப்பேன் என்ற ஸங்கல்பம் உடைய இராமனிடமும் சீதையிடமும் லக்ஷ்மணன் கூறினான்; இராமாயணம் ஸுந்தர காண்டம் (58-87) - அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் - இராமனிடமிருந்து இந்த அரக்கிகளைக் காப்பாற்றும் திறன் சீதையிடம் உள்ளது; இராமாயணம் ஸுந்தர காண்டம் (58-90) - பவேயம் சரணம் ஹி வ: - சீதை அரக்கிகளிடம், “நான் உங்களுக்குச் சரணம் புகும் இடம் ஆவேன்”, என்றாள்; இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-27) - பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா – “இராமா! நீ சீதையுடன் இந்த மலை அடிவாரங்களில் சுகமாக இருப்பாயாக”, என்று லக்ஷ்மணன் கூறினான்; ஸ்தோத்ரரத்னம் (39) - தயா ஸஹாஸீநமநந்த போகினி - மஹாலக்ஷ்மியுடன் இணைந்து ஆதிசேஷன் மீது உள்ள எம்பெருமானை; சதுச்ச்லோகீ (1) - காந்தஸ்தே புருஷோத்தம: - உனது ப்ரியமான நாயகன் புருஷோத்தமன்; ஆத்மஸித்தி (மங்கள ச்லோகம்) - ஸ்வபரிசரண போகை: ஸ்ரீமதி ப்ரீயமாணே - மஹாலக்ஷ்மியுடன் அமர்ந்துள்ள எம்பெருமான், தனக்குச் செய்யப்படும் கைங்கர்யங்களை அனுபவித்து மகிழ்கிறான்; வேதாந்தசாரம் (மங்கள ச்லோகம்) - ஸ்ரீமதே நிர்மலாநந்தோ தந்வதே விஷ்ணவே நம: - மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்துள்ளவனும், தோஷங்கள் அற்றவனும் ஆகிய விஷ்ணுவுக்கு நமஸ்காரம்; வேதாந்த தீபம் (மங்கள ச்லோகம்) - ஸ்ரீய:காந்த: அநந்தோ வரகுணகணைகாஸ்பத வபு: - மஹாலக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும், எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடமாக உள்ளவனும், எங்கும் நிறைந்தவனும்; ஸ்ரீபாஷ்யம் (மங்கள ச்லோகம்) - ப்ரக்ஷ்மணி ஸ்ரீநிவாஸே - மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மம்; கீதா பாஷ்யம் (அறிமுகம்) - ஸ்ரீய:பதிர் நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப: - மஹாலக்ஷ்மியின் பதியும், தாழ்வுகளுக்கு எதிர்தட்டாக உள்ளவனும், கல்யாண குணங்கள் நிறைந்தவனும், எல்லையற்ற ஞானம் மற்றும் ஆனந்தம் கொண்டவனும்; முதல் திருவந்தாதி (86) - நீயும் திருமகளும் நின்றாயால் - குன்றெடுத்து இந்த்ரனின் மழையிலிருந்து காத்தவனே! நீயும் மஹாலக்ஷ்மியும்; திருவாய்மொழி (4-9-10) - ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப - அழகான வளையல்கள் அணிந்த பிராட்டியுடன் நீயும் நிற்க; திருவாய்மொழி (6-9-3) - கோலத் திருமாமகளோடு உன்னை - மஹாலக்ஷ்மியுடன் பொருந்தியுள்ள உன்னை; திருவாய்மொழி (9-2-1) - நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் - உனது கருணையும், தாமரை மலரில் உள்ள பிராட்டியின் கருணையும்; திருவாய்மொழி (9-2-3) - உன் தாமரை மங்கையும் நீயும் - தாமரை மலரில் அமர்ந்துள்ள உனது நாயகியான பிராட்டியும் நீயும்; திருவாய்மொழி (6-10-10) - அகலகில்லேன் இறையும் - உன்னை விட்டு ஒரு நொடியும் பிரியாமல் இருப்பேன் என்ற பிராட்டி; திருவாய்மொழி (1-1-2) - உணர் முழு நலம் - ஞானமாகவும் ஆனந்தமயமாகவும் உள்ளவன்; பெரிய திருமொழி (3-8-1) - நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் - அணையாத விளக்கும், எல்லையற்றவனும் ஆகியவன்.