Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
“சேஷன், சேஷி” என்னும் நிலை “எஜமானன், அடிமை” என்பதில் முடிதல்
மூலம் - இவற்றில் ஈச்வரனுக்கு ப்ரகாசித்த சேஷித்வம், சேதநாசேதந ஸாதாரண தர்மமாகையாலே சேதநைகாந்தமான ஸ்வாமித்வமாகிற விசேஷத்திலே பர்யவஸிப்பித்து அநுஸந்திக்க ப்ராப்தம். இப்படித் தன்னுடைய சேஷத்வமும் ஸாமான்யமாகையாலே தாஸத்வமாகிற விசேஷத்திலே விச்ரமிப்பித்து அநுஸந்திக்கவேணும். இவற்றில் ஸாமான்யமான சேஷ சேஷி பாவம் ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியாலே ப்ரகாச்யம். இதின் விசேஷமான தாஸத்வ ஸ்வாமித்வங்கள் இருவரும் சேதனராய்த் தோற்றுகையாலே அர்த்த ஸித்தம். இப்படி நாராயண சப்தத்திலும் ஸாமான்யமும் விசேஷமும் கண்டு கொள்வது. இதில் ஸாமான்யமான சேஷத்வத்தாலே சேதனனுக்கு ப்ராப்தமான கிஞ்சித்காரம் தாஸத்வமாகிற விசேஷத்தாலே கைங்கர்ய ரூபமான புருஷார்த்தமாயிற்று. இப்படி சேஷித்வத்தாலே வந்த ஈச்வரனுடைய அதிசய யோகமும் ஸ்வாமித்வமாகிற விசேஷத்தாலே அவனுக்குப் புருஷார்த்தமாய்ப் பலிக்கிறது. சேதனருடைய ரக்ஷணத்தில் ஈச்வரன் ப்ராப்தனுமாய் சக்தனுமாய், தததீந ப்ரவ்ருத்தியை ஒழியச் சேதனர் அப்ராப்தமாய் அசக்தருமாயிருக்கைக்கு நிபந்தனம், “ஈச்வரனுடைய நிரூபாதிக சேஷித்வமும் நிரூபாதிக நியாம்யத்வமும், உடையவன் உடைமையை ரக்ஷிக்கையும், ஸமர்த்தன் அஸமர்த்தனை ரக்ஷிக்கையும்” ப்ராப்தமிறே. ரக்ஷிக்கும்போது கர்மவச்யரை ஓருபாயத்திலே மூட்டி ரக்ஷிக்கை ஈச்வரனுக்கு ஸ்வ ஸங்கல்ப நியதம்.
இந்த மூன்று மந்த்ரங்களிலும் ஈச்வரன் அனைத்திற்கும் எஜமானனாக உள்ளான் என்பதும், இவனுக்காகவே அனைத்தும் உள்ளன என்பதும் கூறப்படுகின்றன. அவன் சேதனம் மற்றும் அசேதனம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான எஜமானனாகவே உள்ளான். அசேதனங்களைப் பொறுத்தவரையில், அவை இவனுக்காகவே உள்ளதால், அவற்றின் எஜமானனாக இவன் உள்ளான். ஞானத்துடன் கூடிய சேதனங்களைப் பொறுத்தவரையில், சேதனங்கள் அனைத்தும் அவனுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டிய ஸ்வாமியாக உள்ளான். இந்த மூன்று மந்த்ரங்களையும் நாம் கூறும்போது இந்தக் கருத்துக்களை நினைவில் நிறுத்தவேண்டும். நாம் அவனுக்கு அடிமை என்ற நிலையில் அசேதனங்களுக்கு ஒக்க இருந்தபோதிலும், அவனுடைய தாஸர்கள் என்ற சிறப்புத் தகுதி சேதனர்களான நமக்கு மட்டுமே உள்ளது. ஜீவனுக்கும் பகவானுக்கும் இடையே உள்ள சேஷ-சேஷித்வ உறவுமுறையானது, திருமந்த்ரத்தின் முதல் பதம் மூலம் உணர்த்தப்படுகிறது. ஆனால் சேதனர்களுக்கு மட்டுமே விசேஷமான ஒரு சேஷத்வம் உள்ளது; இது நாம் அவனுக்கு தாஸர்களாக இருப்பதும், அவன் நமது ஸ்வாமியாக இருப்பதும் ஆகும் (இது அசேதனங்களுக்கு இல்லை). இது போன்றே நாராயண என்ற பதம், “அனைத்திற்கும் அவன் எஜமானனாக உள்ளான், ஜீவனுக்கு மட்டுமே ஸ்வாமியாக உள்ளான்”, என்பதைக் கூறுகிறது. நாம் அவனுக்கு சேஷனாக இருந்து, அவனுக்குப் ப்ரயோஜனமாக உள்ள நிலை என்பது, நம்மை நாம் அவனுக்குத் தாஸனாகக் கொள்ளும்போது கைங்கர்யம் என்ற புருஷார்த்த நிலையாகிறது. ஆக அனைத்திற்கும் எஜமானனாக (சேஷி) உள்ளான் என்பதை அறிந்தால், வெறும் மேன்மை என்பது மட்டுமே விளங்கும், ஆனால் அவன் ஸ்வாமி என்பதை அறிந்தபோது புருஷார்த்தம் கைகூடுகிறது. அனைத்தையும் காப்பாற்றும் கடமை உள்ளவன் என்பது ஈச்வரனுக்கு உள்ளது, அதற்கான திறனும் அவனுக்கு மட்டுமே உள்ளது. சேதனனுக்குத் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும் தகுதியோ திறனோ இல்லை. இதன் காரணம், ஈச்வரன் எதனையும் எதிர்பாராத எஜமானனாக (நிருபாதிக சேஷி) உள்ளான். ஒரு பொருளின் உரிமையாளன் அந்தப் பொருளைக் காக்க வேண்டியது அவன் கடமையன்றோ? பலம் பொருந்தியவன் பலமற்றவனைக் காப்பது உண்மையன்றோ? ஆனால் ஈச்வரன், “ஜீவன் ஏதோ ஓர் உபாயம் மூலம் ஈச்வரன் தன்னைக் காக்கும்படிச் செய்தால் மட்டுமே, அவனைக் (ஜீவனை) காப்பது”, என்ற ஸங்கல்பத்தை ஈச்வரன் எடுத்துக் கொள்கிறான்.