Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

அப்புள்ளார் அருளிச் செய்த உதாரணங்கள்

மூலம் - இப்படி சரமச்லோகத்திலே ஸித்தோபாய வசீகரணார்த்தமாக விஹிதமான ஸாத்யோபாய விசேஷத்தை த்வயத்தாலே அனுஷ்டிக்கும்போதைக்கு அநுஸந்தேயங்களாகக் கொண்டு அவச்யாபேக்ஷிதங்களான அர்த்தங்களை எல்லாம் சிறிய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமாப்போலே சுருங்கத் தெளிவிக்கும் திருமந்த்ரம். அதில் ப்ரதம பதத்தில் அர்த்தங்களை அர்ஜுன ரதத்திலும், “அக்ரத: ப்ரயயௌ ராம:” என்கிற ச்லோகத்திலும் கண்டு கொள்வது. த்விதீய பதத்தில் சப்தத்தாலும், அர்த்த ஸ்வபாவத்தாலும் வரும் அர்த்தங்களை ஸ்ரீபரதாழ்வானுடையவும் ஸ்ரீசத்ருக்நாழ்வானுடையவும் வ்ருத்தாந்தங்களிலே அறிவது. “நானுன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே நீயென்னையன்றியிலை” என்னும்படி நிற்கிற நாராயண சப்தார்த்தத்தைக் கோஸல ஜன பதத்தில் ஜந்துக்களையும் சக்ரவர்த்தித் திருமகனையும் உதாஹரணமாக்கிக் கண்டு கொள்வது. பூர்வ பத த்வயத்தில் தோன்றின காஷ்டாப்ராப்த பாரார்த்ய பாரதந்த்ரியங்கள் பேரணியாகத் த்ருதீய பதத்தில் சதுர்த்தியில் கருத்திலே ப்ரார்த்தநீயமான சேஷியுகந்த கைங்கர்யத்தை இளையபெருமாளுடையவும் இவருடைய அவதார விசேஷமான திருவடி நிலையாழ்வாருடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே தெளிவது. இது திருமந்த்ர அர்த்தாநுஸந்தாநத்துக்கு குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு. இதின் படியிலே த்வயத்திலும் சரமச்லோகத்திலும் உள்ள அர்த்தங்கள் தெளிந்து கொள்வது.

சரமச்லோகமானது நாம் பகவானைச் சென்றடையும் உபாயமாக (ஸித்தோபாயம்) அவனே உள்ளான் என்றும், நாம் அவனைச் சென்றடைய உதவுவதற்கு அவன் எப்போதும் சித்தமாக உள்ளான் என்றும், அவனது உபாயம் நமக்குக் கிட்டவேண்டும் என்றால் நாம் ஒரு உபாயம் (ஸாத்ய உபாயம்) கைக்கொள்ளவேண்டும் என்றும், இந்த உபாயம் பகவானிடத்தில் சரணாகதியே என்றும் கூறியது. இந்தச் சரணாகதியைச் செய்யும்போது த்வயத்தைக் கூறியபடி இருத்தல் வேண்டும், மேலும் அந்த நேரத்தில் நமது மனதில் என்ன சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைத் திருமந்த்ரமானது சிறிய கண்ணாடி பெரிய உருவைக் காண்பிப்பது போன்று, நமக்கு உணர்த்துகிறது. திருமந்த்ரத்தின் முதல் பதமான ஓம் என்பதன் இரு பொருள்களை (அர்த்தம்) அர்ஜுனனின் தேரிலும், இராமாயணம் ஆரண்யகாண்டம் (11-1) - அக்ரத: ப்ரயயௌ ராம: - என்ற ச்லோகத்தின் மூலமும் அறியலாம் (இந்த ச்லோகத்தின் பொருள் - கானகத்தில் இராமன் முதலில் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து சீதை நடுவில் சென்றாள். பின்னால் இலட்சுமணன் கையில் வில்லுடன் சென்றான் - என்பதாகும். இராமன் = அ என்ற எழுத்து, சீதை = உ என்ற எழுத்து, இலட்சுமணன் = ம என்ற எழுத்து. இம்மூன்றும் இணைந்ததே ஓம் என்பதாகும்). அடுத்து திருமந்த்ரத்தின் இரண்டாம் பதமான நம: என்பது, “நான் சுதந்த்ரமானவன் அல்லன், நான் பகவானுக்கு முழுவதுமாகக் கட்டுப்பட்டவன்”, என்ற பொருளை உணர்த்துவதாகும். இதனைப் பரதன் மற்றும் சத்ருக்னன் மூலமாக உணரலாம் (பரதன் இராமனுக்குத் தொண்டனாக இருந்தான் - பகவத் பாரதந்த்ர்யம், சத்ருக்னன் பரதனுக்குத் தொண்டனாக இருந்தான் - பாகவத பாரதந்த்ர்யம்). அடுத்து நாராயண என்ற பதம் உள்ளது. இந்தப் பதமானது, “அவன் உயிர்களின் இருப்பிடமாக உள்ளான். உயிர்கள் அவனது இருப்பிடமாக உள்ளன” என்ற இரண்டு பொருளையும் அளிப்பதாகும், இதனைத் திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியில் (7) - நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாராணனே நீ என்னை அன்றி இலை - என்று கூறினார். இதே கருத்து இராமாயணத்திலும் வெளிப்பட்டது, “இராமனைப் பிரிந்த கோஸல நாட்டின் தாவரங்களும் விலங்குகளும் வாடின, இராமன் இந்த உலகை விட்டுப் பிரிந்தபோது அவற்றைப் பிரிய இயலாமல் தன்னுடனே கொண்டு சென்றான்”, என்பது காண்க. திருமந்த்ரத்தின் முதல் பதமான ப்ரணவம், “ம எனப்படும் ஜீவன் அ எனப்படும் பகவானுக்காகவே உள்ளான்”, என்பதைக் குறிக்கும். இரண்டாம் பதமான நம என்பது, “ஜீவன் பகவானையே சார்ந்துள்ளான்”, என்பதைக் குறிக்கும். ஜீவன் பகவானுக்காகவும் அவனது அடியார்களுக்காகவுமே உள்ளான்; ஜீவன் பகவானையும் அவனது அடியார்களையுமே சார்ந்துள்ளான். ஆக, நாராயணாய என்ற பதமானது, ஜீவனின் கைங்கர்யம் என்ற புருஷார்த்தத்தை உணர்த்துகிறது. இந்தக் கைங்கர்ய நிலையானது லக்ஷ்மணன் விஷயத்தில் நேரடியாகக் காணப்பட்டது. ஆதிசேஷனின் அவதாரமாகவே உள்ள லக்ஷ்மணனின் அம்சமான பாதுகை, இராமனை விட்டுப் பிரிந்து, அவனது தொண்டனான பரதனுடன் சென்றதன் மூலம் பாகவத கைங்கர்யத்தை உணர்த்தியது. இவை அனைத்தும் திருமந்த்ரத்தின் பொருளை நன்றாக உணர்த்த அப்புள்ளார் அருளிச் செய்த உதாரணங்களாகும். இது போன்றே த்வயத்திலும், சரமச்லோகத்திலும் உள்ள பொருள்களை உணர வேண்டும்.