Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
மேலே உள்ள கருத்துக்கள் ரஹஸ்யத்ரயத்தில் உள்ளன என்று காண்பித்தல்
மூலம் - இவ்வர்த்தம் ப்ரதம ரஹஸ்யத்தில் கிடக்கிறபடி எங்ஙனேயென்னில் - நாராயண சப்தத்தில், தத்புருஷ பஹுவ்ரீஹி ஸமாஸத்வயத்தாலுமுண்டான தாரகத்வ வ்யாபகத்வாதிகளாலே அநந்யாதாரத்வாதி விசிஷ்ட ஸ்வரூப லாபமும், பாரார்த்ய பாரதந்த்ய கர்ப்பமான கீழில் பத த்வயத்தாலே அநநய ப்ரயோஜநத்வமும் அநந்ய சரணத்வமும் பலிக்கும். ப்ரபத்த்யநுஷ்டான ப்ரகாசகமான மந்த்ர ரத்னத்தில் பூர்வகண்டத்தாலே அநந்ய சரணத்வமும், உத்தரகண்டத்தாலே அநந்ய ப்ரயோஜனத்வமும், உபயபாகத்தாலும் அநந்யாதாரத்வமும் ப்ரகாசிக்கிறது. இப்படி சப்தமாகவும் ஆர்த்தமாகவும் சரமச்லோகத்திலும் இவ்வகுப்புக் கண்டு கொள்வது.
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் ரஹஸ்ய த்ரயத்தின் முதல் ரஹஸ்யமான திருமந்த்ரத்தில் எவ்விதம் பொதிந்துள்ளது என்ற கேள்வி எழலாம். “நாராயணா” என்ற சப்தமானது “தாரகன் (அனைத்தையும் தாங்குபவன்)” என்ற பொருளையும், “அனைத்தையும் வ்யாபித்துள்ளவன்” என்ற பொருளையும் அளிக்கவல்லதாகும். எப்படி? இதனை “நாராயணாம் அயநம் = நரங்களுக்கு இருப்பிடம், அனைத்திற்கும் இருப்பிடம்”; ஆகவே தாரகன் என்று கொள்ளலாம். அல்லது இதனை “நாரா: அயநம் யஸ்ய = நரங்கள் யாருக்கு அயனமோ = யாருக்கு நரங்கள் இருப்பிடமோ”; இதன் மூலம் அனைத்திலும் பரவியுள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் ஜீவன் தனது ஸ்வரூபத்திற்கு ஏற்ப வேறு யாரையும் ஆதாரமாக உடையவன் அல்லன் என்பதையும், நாராயணனைத் தவிர வேறு யாராலும் வ்யாபிக்கப்படாதவன் (தன்னுள் அந்தர்யாமியாக) என்பதையும் அறியலாம். நாராயணாய என்பதற்கு முன்பாக உள்ள ஓம் மற்றும் நமோ என்பவை, ஜீவன் நாராயணனுக்காக மட்டுமே உள்ளான் (அநந்ய ப்ரயோஜத்வம்) என்பதையும், ஜீவன் தனது ஆதாரத்திற்கு நாராயணனை மட்டுமே கொண்டுள்ளான் (அநந்ய சரணத்வம்) என்பதையும் விளக்குகின்றன. ஆக இவற்றின் மூலம் ஜீவன் நாராயணனைத் தவிர வேறு யாருடைய பயனுக்காகவும் இல்லை என்பதையும், நாராயணனைத் தவிர ஜீவனுக்கு அடைக்கலம் வேறு யாரும் இல்லை என்பதையும் உணரலாம். ப்ரபத்தியை விளக்குவதும், மந்த்ரரத்னம் எனப்படுவதும் ஆகிய த்வயமந்த்ரத்தின் முதல் பகுதியானது, ஜீவனுக்கு நாராயணனைத் தவிர அடைக்கலம் வேறு யாரும் இல்லை (அநந்ய சரணத்வம்) என்பதைக் கூறுகிறது, அதன் பிற்பகுதி, ஜீவன் நாராயணனுக்காக மட்டுமே உள்ளான், வேறு யாருடைய பயனுக்காகவும் அல்லன் (அநந்ய ப்ரயோஜனத்வம்) என்பதைக் கூறுகிறது. இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஜீவனுக்கு வேறு ஆதாரம் இல்லை (அநந்யாதாரத்வம்) என்பதை உணர்த்துகிறது. இதே கருத்துக்கள் சரமச்லோகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறப்பட்டதை உணரலாம்.