Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

சேஷ-சேஷி ஞானத்தினால் உண்டாகும் பயன்

மூலம் - இந்த ஆதாராதேய பாவாதிகளால் இச்சேதனனுக்கு பலிப்பதென் என்னில் ஆதாராதேய பாவத்தாலே அவனுடைய ஜ்ஞாநசக்த்யாதிகளுக்குப் போலே அப்ருதக்ஸித்த ஸ்வரூபலாபமும் சேஷ சேஷி பாவத்தாலே ஆத்மாபிமாநாநுகுண புருஷார்த்த வ்யவஸ்தையின்படியே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்த ருசியும், சேஷ சேஷி பாவத்தாலும் நியந்த்ரு நியாம்ய பாவத்தாலும் ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்துக்கு அநுரூபமாய் நிரபேக்ஷமுமாயிருந்துள்ள உபாய விசேஷத்தை அறிகையும் பலிக்கும். ஆக இவற்றால் இச்சேதனன் அநந்யாதாரன், அநந்யப்ரயோஜனன், அநந்யசரணன் என்றாயிற்று.

ஒரு கேள்வி எழலாம். இவ்விதம் அவனால் தாங்கப்பட்டு, அவனால் நியமிக்கப்பட்டு, அவனது ப்ரயோஜனத்திற்காக மட்டுமே வாழ்ந்து வருவதால் சேதனனுக்கு என்ன பயன்? ஈச்வரனைத் தனது ஆதாரமாகக் கொண்டு வாழ்வதால், ஈச்வரனின் ஞானம் மற்றும் சக்தி போன்ற குணங்கள் அவனை விட்டுப் பிரியாமல் உள்ளது போன்று, ஜீவனும் அவனை விட்டுப் பிரியாத ஸ்வரூபத்தை அடைகிறான். ஈச்வரனின் அடிமையாக உள்ளதாலும், ஈச்வரனைத் தனது எஜமானனாகக் கொள்வதாலும் தான் பெறவேண்டிய புருஷார்த்தம் என்னவென்று அறிகிறான். தனது ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி உள்ள அந்தப் புருஷார்த்தத்தின் மீது அவனுக்கு விருப்பம் (ருசி) பிறக்கிறது, காரணம் எந்த ஒரு பொருளும் தனது ஸ்வபாவத்திற்கு ஏற்ப உள்ள குறிக்கோளை விரும்பும் அல்லவோ? பகவானுக்குத் தான் அடிமையாக இருப்பதாலும், அவனைத் தனது ஆதாரமாகவும் நியமிப்பவனாகவும் கொள்வதாலும், சேதனனுக்குத் தனது ஸ்வரூபத்திற்கு ஏற்ற புருஷார்த்தத்தை அடையும் உபாயமாகவும்-உபேயமாகவும் (உபேயம் = அடையவேண்டிய இலக்கு, உபாயம் = அந்த இலக்கை அடைய உதவும் மார்க்கம்) பகவானே உள்ளான் என்ற ஞானம் ஏற்படுகிறது. இவ்விதம் சேதனனுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பதற்கு பகவான் வேறு எதனையும் எதிர்பார்ப்பதில்லை. ஆக, தனது இருப்புக்கு வேறு ஏதும் ஆதாரமாக இல்லாத சேதனன், வேறு எதற்காகவும் வாழாமல், இந்த ஆதாரமாக உள்ள பகவானுக்காகவே இருக்கிறான் என்றாகிறது.