Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
ஈச்வரனுடைய எஜமானத்தன்மை
மூலம் - ஈச்வரன் ஸர்வசேஷியாகையாவது, “உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமந ஆத்யை: சித் அசிதௌ ஸ்வம் உத்திச்ய ஸ்ரீமாந் இதி வததி வாகௌபநிஷதீ | உபாயோபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணௌ அதஸ்த்வாம் ஸ்ரீரங்கேசய சரணமவ்யாஜமபஜம்” என்கிறபடியே தன் ப்ரயோஜனத்துக்காகவே பாரார்த்யைக ஸ்வபாவங்களான இவற்றை உபாதாநம் பண்ணி இவற்றாலே அதிசயவனாகை.
ஈச்வரன் அனைவரின் எஜமானனாக உள்ளான் என்றே கூற வேண்டும் - காரணம் அவனுக்காகவே அனைத்தும் உள்ளன. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-87) - உபாதத்தே ஸத்தா ஸ்திதி நியமந ஆத்யை: சித் அசிதௌ ஸ்வம் உத்திச்ய ஸ்ரீமாந் இதி வததி வாகௌபநிஷதீ | உபாயோபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணௌ அதஸ்த்வாம் ஸ்ரீரங்கேசய சரணமவ்யாஜமபஜம் - இந்த உலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்குவது, உண்டாக்கிய அனைத்தியும் நிலை நிறுத்துவது, அவற்றை நியமிப்பது போன்றவற்றைச் செய்வதன் மூலம் ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனாக உள்ள ஸ்ரீரங்கநாதன், சேதன-அசேதனங்களைத் தனது ப்ரயோஜனத்திற்காகவே என்று உணர்த்துகிறான், இவ்விதமாகவே உபனிஷத்துக்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கநாதா! நீ சேஷியாக (எஜமானன்) உள்ளதால் ஜீவன் அடையவேண்டிய இடமாகவும்(உபேயம்), அவ்விதம் அடையப் பின்பற்ற வேண்டிய மார்க்கமாகவும்(உபாயம்) நீயே உள்ளாய். இது உனது ஸ்வபாவமாகவே உள்ளது, உன்னிடம் ஏதோ ஒரு காலத்தில் வந்து புகுந்த தன்மை அன்று. ஆகவே, ஸ்ரீரங்கத்தில் உறைபவனே! வேறு பயன் கருதாமல் உன்னிடம் சரணம் புகுந்தேன் - என்றார். ஆக, சேதன-அசேதனங்கள் தங்களுக்காக இல்லை, அவனுக்குப் பயன்படுவதற்காகவே உள்ளன. அவற்றின் ஸ்வபாவமே அவனுக்காக இருப்பதாகும். இவ்விதம் அவற்றைத் தனது பயனுக்காகக் கொள்ளும்போது அவனது குணங்கள் ப்ரகாசிக்கின்றன.