Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்

ஈச்வரன் அனைத்தையும் தாங்குதல் மற்றும் நியமித்தல் குறித்த விளக்கம்

மூலம் – லோகத்திலும், சரீரம் சரீரியினுடைய ஸ்வரூபாச்ரிதமுமாய் ஸங்கல்பாச்ரிதமுமாய் இருக்கக் காண நின்றோம். ஜீவனிருந்த காலமிருந்து இவன் விட்டபோது அழிகையாலே ஸ்வரூபாச்ரிதம்; இவ்வர்த்தம் ஸங்கல்பமில்லாத ஸுஷுப்த்யாதி அவஸ்தைகளிலே தெளிவது. ஜாகராதி தேசைகளில் ஸங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும்போது ஸங்கல்பாச்ரிதம் என்னக்கடவது. இதில் ஸ்வரூபாச்ரிதமா யிருக்கிறபடியை ஆதேயத்வமென்றும், ஸங்கல்பாதீநமாயிருக்கிறபடியை நியாம்யத்வமென்றும் சொல்லுகிறது.

இந்த உலகில் நமது உடலானது நமது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்பவோ அல்லது ஆத்மாவின் ஸங்கல்பத்தினாலோ இயங்குவதைக் காணலாம். இதன் காரணம் - இந்த உடலானது, ஆத்மா உடலுக்குள் புகுவதிலிருந்து அது வெளியேறும்வரை மட்டுமே உள்ளதைக் காண்கிறோம். ஆத்மா வெளியேறியபின் உடல் அழிவதையும் காணலாம். ஆக இந்த உடலானது ஆத்மாவின் ஸ்வரூபத்தாலோ அல்லது ஸங்கல்பத்தாலோ தாங்கப்படுகின்றது. நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளபோது, ஆத்மாவின் ஸங்கல்பம் என்பது காணப்படாமல் உள்ளது, ஆனாலும் உடல் அழியாமல் உள்ளது, ஆக இந்த நிலையில் உடலானது ஆத்மாவின் ஸ்வரூபத்தால் தாங்கப்படுகிறது. விழிப்பு நிலையில் இந்த உடல் கீழே விழாதபடி ஆத்மாவின் ஸங்கல்பத்தால் தாங்கப்படுகிறது. இந்த உடல் ஆத்மாவின் ஸ்வரூபத்தால் தாங்கப்படும்போது, “உடல் ஆத்மாவால் தாங்கப்படுகிறது (ஆதேயத்வம்)”, என்று கூறப்படும். இந்த உடல் ஆத்மாவின் ஸங்கல்பத்தால் தாங்கப்படும்போது, “உடல் ஆத்மாவால் நியமிக்கப்படுகிறது (நியாம்யத்வம்)”, என்று கூறப்படும்.