Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 3.ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரம்
ஈச்வரன் அனைத்தையும் தாங்குதல் மற்றும் நியமித்தல் குறித்த விளக்கம்
மூலம் - குருத்ரவ்யங்கள் ஸங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்த்ரங்களில் சொல்லுமது, “த்யைஸ்ஸ சந்த்ரார்கநக்ஷத்ரம் கம் திசோ பூர்மஹோததி: | வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந:” என்கிறபடியே ஓரொரு தேச விசேஷங்களிலே விழாதபடி நிறுத்துகையைப் பற்ற. இப்படி இச்சாதீந ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளான வஸ்துக்களுக்குப் பரமாத்ம ஸ்வரூபம் என் செய்கிறது என்னில், பரமாத்மாவினுடைய இச்சை இவ்வஸ்துக்களைப் பரமாத்மாவின் ஸ்வருபாச்ரிதங்களாக வகுத்து வைக்கும். இப்படி ஸர்வ வஸ்துவும் ஈச்வர ஸ்வரூபா(தீந)ச்ரிதமுமாய் ஈச்வரேச்சாதீநமுமாயிருக்கும்.
கனமான பொருள்கள் ஈச்வரனின் ஸங்கல்பத்தினால் தாங்கப்பட்டே உள்ளன என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. உதாரணமாக மஹாபாரதம் அநுசாஸநபர்வம் (254-136) - த்யைஸ்ஸ சந்த்ரார்கநக்ஷத்ரம் கம் திசோ பூர்மஹோததி: | வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந: - ஸ்வர்க்கம், சந்த்ரன் சூரியன் நக்ஷத்ரங்கள் ஆகியவற்றுடன் உள்ள ஆகாயம், திசைகள், பூமி, பல பெரிய ஸமுத்ரங்கள் ஆகிய அனைத்தும் பரமாத்மாவான வாஸுதேவனின் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு உள்ளன - என்று கூறியது. இதன் மூலம் இது போன்ற பெரிய வஸ்துக்கள் அவற்றுக்கான இடங்களில் உள்ள நிலையும், அவை அங்கிருந்து நழுவாதபடி உள்ள நிலையும் பகவானின் ஸங்கல்பத்தினாலேயே ஆகும். இவ்விதம் அனைத்தும் அவனது ஸங்கல்பத்தினால் தாங்கப்படுவதற்கு, அவனுடைய ஸ்வரூபம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழலாம். பகவானுடைய ஸங்கல்பம் என்பதே அனைத்தையும் அவனது ஸ்வரூபத்தினை அண்டியிருக்கும்படிச் செய்கிறது என்று கருத்து. இவ்விதம் அனைத்தும் அவனது ஸ்வரூபத்தையும், ஸங்கல்பத்தையும் அண்டியே உள்ளன.